பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்திருந்தது. வரலாறு காணாத அளவுக்கு ரன்மழை பொழிந்த இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல் ஆடவில்லை.
பென்ச்சில் வைக்கப்பட்டிருந்தார். மேக்ஸ்வெல் ட்ராப் செய்யப்பட்டிருக்கிறார் என அனைவரும் நினைக்கையில், அவரே முன்வந்து நானேதான் என்னை அணியிலிருந்து நீக்குங்கள் என்று சொன்னேன் எனக் கூறியிருக்கிறார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் மேக்ஸ்வெல் பேசியிருப்பதாவது, ‘கடந்த சில போட்டிகளுக்குப் பிறகுதான் இப்படி ஒரு முடிவை எடுப்பது எனக்கு எளிதாக இருந்தது. கடைசியாக நடந்த போட்டியில் ஆடி முடித்தவுடன் கேப்டன் ஃபாப் மற்றும் பயிற்சியாளரிடம் சென்று எனக்கு பதிலாக வேறு யாரையாவது அணியில் முயற்சித்து பார்க்கலாம் என்றேன்.
நான் இதே மாதிரியான சூழல்களில் முன்பும் இருந்திருக்கிறேன். சரியானவை நிகழாத சமயத்தில் இன்னும் ஆடினால் இன்னும் சரிவை நோக்கிதான் செல்வோம். அதனால் இப்படி ஒரு முடிவை எடுக்க இதுதான் சரியான நேரம் என நினைத்தேன்.
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் வலுவடைய நேரம் எடுத்துக் கொண்டு வருவேன்.
ஒருவேளை இந்த சீசனின் பிற்பகுதியில் அணிக்கு என்னுடைய தேவை ஏற்பட்டால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாரான நிலையிலிருந்து ஆடி தாக்கம் ஏற்படுத்துவேன்
நாங்கள் அணிக்காக ஆட விரும்பும் அளவுக்கு எப்படி ஆட வேண்டும் என திட்டமிடவில்லையோ என நினைக்கிறேன். முடிவுகள் இதைத்தான் பிரதிபலிக்கின்றன. தனிப்பட்ட முறையில் நான் சிறப்பாக ஆடவில்லை. அணிக்காக பேட்டின் மூலம் பங்களிப்பு செய்யவில்லை. பவர்ப்ளே முடிந்த பிறகு மிடில் ஓவர்களை கையில் எடுத்துக் கொண்டு ஆடிக்கொடுப்பதுதான் என்னுடைய வேலை. அதை நான் சரியாக செய்யவில்லை. இந்த போட்டி நடந்த பிட்ச் கடந்த சில போட்டிகள் நடந்த பிட்ச்சை போல கடினமாக இருக்கவில்லை. ஒரு பேட்டராக இப்படியான பிட்ச்சையும் போட்டியையும் தவறவிடுவது துரதிஷ்டவசமானது. ஆனால், நான் முன்பே சொன்னதைப்போல என்னுடைய உடலுக்கும் மனதுக்கும் நான் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும்.
என்னுடைய ஆட்டத்தின் மீது எனக்கு நிறைய பெருமிதம் இருக்கிறது. நான் கடினமாக உழைக்கிறேன். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்கு இருக்கும் அயர்ச்சிதான் நான் கொஞ்சம் தடுமாறுவதற்கு காரணம் என நினைக்கிறேன்.’ என்றார்.
மேக்ஸ்வெல்லின் இந்த கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை கமென்ட்டில் தெரியப்படுத்துங்கள்.