புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். பணப் பட்டுவாடா குறித்து புகார் தந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் இன்று (ஏப்.18) கூறியதாவது: “ஒரு இளைஞனாக வாக்குக்கு பணம் தரக்கூடாது என்று அதிமுக சார்பில் இந்தத் தேர்தலில் களமிறங்கி களத்தில் உள்ளேன். நாங்கள் வாக்குக்கு பணம் தர மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்து சொல்வோம். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் தர தொடங்கியுள்ளனர். புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வாக்குக்கு 500 ரூபாயும், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வாக்குக்கு 200 ரூபாயும் தருகின்றனர். இவர்கள் ஏழை மக்களை பணம் தந்து கொச்சைப்படுத்துகின்றனர்.
நேர்மையாக நடைபெற வேண்டிய தேர்தல். அடுத்து வரும் சமூகத்துக்கு வழிவிட வேண்டிய தேர்தல். அவர்கள் மீண்டும் மீண்டும் வாக்குக்கு பணம் கொடுத்துதான் தேர்தலை சந்திப்பதாக இருந்தால், ஏழைகளை ஏமாற்றும் இந்தத் தேர்தலை புறக்கணிக்கத் தயாராக இருக்கிறேன்.
இது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி ஆவணங்களுடன் புகார் தர உள்ளேன். புதுச்சேரியில் உள்ள தேர்தல் அதிகாரி மீது நம்பிக்கை இல்லை. பறக்கும் படையினரை எங்குமே காண இயலவில்லை. காரில் மட்டுமே அவர்கள் பயணிக்கின்றனர். ஆய்வு செய்வதில்லை. தேர்தல் ஆணையம் புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். வாக்குக்கு பணம் தருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.