தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க சார்பில் டாக்டர் பிரேம்குமார், பா.ஜ.க கூட்டணியில் த.மா.கா சார்பில் வேணுகோபால், நா.த.க சார்பில் டாக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.
‘தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை’, ‘பண்ணையார் மனப்பான்மையோடு நடந்துகொள்கிறார்’ என்றெல்லாம் நெகட்டிவ்வாகப் பெயரெடுத்திருந்தார் டி.ஆர்.பாலு. ஆனால், எதிரணியில் பலமான வேட்பாளர்கள் இல்லை என்பது அவருக்கு பாசிட்டிவ்வாகிவிட்டது. ‘தொகுதி முழுக்க நன்கு பரிச்சயமான வேட்பாளர் என்பதால், மிக எளிமையாக வெற்றிபெறுவார்
டி.ஆர்.பாலு’ என எதிர்க்கட்சியினரே பேசத் தொடங்கிவிட்டனர். எனவே, ‘கடந்த முறை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்று காட்டியதையே இந்த முறை ஓவர்டேக் செய்ய வேண்டும்’ என்ற திட்டத்தோடு, பிரசாரத்தில் அதீத ஆர்வம் காட்டிவருகிறார் பாலு. பசைக்கும் பஞ்சமில்லை. எனவே, கூட்டணிக் கட்சியினரும் உற்சாகத்தோடு களமாடிவருகிறார்கள்.
அ.தி.மு.க வேட்பாளரான பிரேம்குமார், ‘ஸ்வீட்டாக’ அணுகி ஒரு டஜனுக்கும் அதிகமான அ.தி.மு.க சீனியர் நிர்வாகிகளை வைத்து தீயாகப் பிரசாரம் செய்கிறார். ஆனால் வேட்பாளருக்கு, தொகுதியில் பெரிய அளவில் அறிமுகம் இல்லை. தொகுதிப் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், உட்கட்சியில் கும்மியடிக்கும் பிரச்னைகளைச் சரிசெய்ய முடியாமல் திணறிவருகிறார். இவையெல்லாம் பிரேம்குமாருக்கு மைனஸ். பா.ஜ.க கூட்டணியில், வலுக்கட்டாயமாகத் தொகுதியை த.மா.கா-விடம் திணித்துவிட்டார்கள். அதனால், தொடக்கத்திலிருந்தே பிரசாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை வேட்பாளர் வேணுகோபால். தொகுதிக்குள் ஓரளவு செல்வாக்குகொண்ட பா.ம.க நிர்வாகிகளும் திடீர் திடீரெனக் களத்திலிருந்து காணாமல் போய்விடுவதால், பிரசாரம் பிசுபிசுக்கிறது.
நாம் தமிழர் வேட்பாளருக்கு மனு தாக்கல் செய்த பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மிகுந்த கால தாமதத்துடனேயே பிரசாரம் தொடங்கப்பட்டது. நா.த.க-வுக்கான ஓட்டை வாங்கினாலே போதும் என அமைதியாகிவிட்டனர் அந்தக் கட்சியினர்.
அறிந்த முகம், அள்ளி இறைக்கப்படும் ‘இனிப்புகள்’ என முதல் இடத்தை இப்போதே ரிசர்வ் செய்துவிட்டார் டி.ஆர்.பாலு. அடுத்த இடத்தை அ.தி.மு.க பிடித்துக்கொள்ள, மூன்றாவது இடத்தில் உட்காருகிறது த.மா.கா!
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், அ.தி.மு.க-வில் ஜெயபிரகாஷ், பா.ஜ.க-வில் நரசிம்மன், நாம் தமிழர் கட்சியில் வீரப்பனின் மகள் வித்யா ராணி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
மூன்று முறை ஓசூர் எம்.எல்.ஏ-வாக இருந்த கோபிநாத், சில ஆண்டுகளாக லைம்லைட்டில் இல்லை. இந்த நிலையில், சீட்டை கூட்டணிக்குக் கொடுத்ததோடு வேட்பாளராக கோபியை நிறுத்தியதால், சீட்டுக்காக முட்டி மோதிய உள்ளூர் தி.மு.க பிரமுகர்கள், கடுப்பில் பிரசாரக் களத்துக்கு வராமல் ஒதுங்கிவிட்டனர். இது அவருக்கு மைனஸ். ஆனாலும், தி.மு.க., கம்யூனிஸ்ட் கூட்டணி வாக்குகள் பலம், காங்கிரஸுக்கான செல்வாக்கு உள்ளிட்டவை தொகுதி முழுக்கப் படர்ந்திருப்பது ப்ளஸ். தொகுதியிலுள்ள வால்மீகி சமூகத்தினர் ‘தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என்று பல ஆண்டுக்காலமாகக் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். இந்தத் தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் அதை வாக்குறுதியாகவும் கொடுத்திருப்பது காங்கிரஸின் கையை உயர்த்திருக்கிறது. பிற மொழி பேசக்கூடிய மக்களின் கரமும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியின் கரத்தைப் பலப்படுத்தியிருக்கிறது.
ஓசூர் மாநகராட்சி கவுன்சிலரும், மண்டலக்குழுத் தலைவருமான அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபிரகாஷ் பசையை வாரி இறைத்து, நம்பிக்கையோடு சுற்றிச் சுழன்று வாக்கு சேகரிக்கிறார்.
கே.பி.முனுசாமியின் பிரசாரத்தால் தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் வன்னியர் சமூக வாக்குகள் தன்னைக் கரைசேர்க்கும் என்று நம்புகிறார் ஜெயபிரகாஷ். பா.ம.க-விலும் நீண்டகாலம் பயணித்தவர் என்பதால், அங்கிருந்தும் நட்புரீதியான வாக்குகள் மடைமாறி வரும் என நம்புகிறார். ஆனாலும், ஆதிதிராவிடர், ஒக்கலிக கவுடா, இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் ஆகியோரின் ஆதரவு எதிர்பார்த்த அளவில் கிடைக்காதது இவருக்கு மைனஸ்.
மோடியின் செல்வாக்கும், பா.ம.க-வின் வாக்குவங்கியும் தன்னைக் கரைசேர்க்கும் என நம்புகிறார் பா.ஜ.க-வின் நரசிம்மன். ஆனால், கூட்டணியிலுள்ள பா.ம.க வன்னியர்களிடமே அவருக்கு வரவேற்பு இல்லாதது மைனஸ்.
நாம் தமிழர் வேட்பாளரான வீரப்பனின் மகள் வித்யா ராணி, வன்னியர் வாக்குகளைக் குறிவைத்திருப்பது, அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்குப் பெரிய மைனஸ்.
தற்போதைய சூழலில், கிருஷ்ணகிரியில் காங்கிரஸின் கரமே ஓங்கியிருக்கிறது. இரட்டை இலை இரண்டாவது இடத்துக்கு முந்த, மூன்றாவது இடத்துக்கு, வித்யா ராணியும் நரசிம்மனும் முட்டி மோதுகிறார்கள்!
தி.மு.க சார்பில் மலையரசன், அ.தி.மு.க-வில் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குமரகுரு, பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் தேவதாஸ், நாம் தமிழர் கட்சியில் ஜெகதீசன் ஆகியோர் களத்தில் நிற்கின்றனர்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில், இந்தத் தொகுதியில் 3.21 லட்சம் வாக்குகள் வாங்கியது தே.மு.தி.க. அத்துடன், விஜயகாந்த் வெற்றிபெற்ற ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியும், இந்த நாடாளுமன்றத் தொகுதியில்தான் வருகிறது. எனவே, தொகுதியை எதிர்பார்த்தது தே.மு.தி.க. எடப்பாடியும் அதற்குச் சம்மதம் தெரிவிக்கும் மனநிலையில்தான் இருந்தார். ஆனால், தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயனுடனான தனிப்பட்ட சவாலுக்காக, தொகுதியை எடப்பாடியிடம் கேட்டுப் பெற்றுப் போட்டியிடுகிறார் குமரகுரு.
மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதும், பலமான பசைப் பின்னணியைக்கொண்டவர் என்பதும் குமரகுருவுக்கு ப்ளஸ். இந்தத் தொகுதியில் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு அ.தி.மு.க வசம் இருப்பதும், அவற்றில் மூன்று சேலம் மாவட்டத்தில் வருவதும், தே.மு.தி.க-வுக்கு இருக்கும் கணிசமான வாக்குவங்கியும் குமரகுருவுக்குக் கூடுதல் பலம்.
சீட் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட உள்ளூர் கட்சி நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டி, தன் உறவினரான மலையரசனை இங்கு களமிறக்கியிருக்கிறார், தி.மு.க-வின் வசந்தம் கார்த்திகேயன். இந்தத் தொகுதியில் தி.மு.க தக்கவைத்திருக்கும் நிலையான வாக்குவங்கியுடன், கூட்டணிக் கட்சிகளின் பலமும் மலையரசனுக்கு ப்ளஸ்.
அதேசமயம், `ஏற்கெனவே கட்சிக்காரர்களை பண்ணையார் மனப்பான்மையுடன் நடத்திவரும் வசந்தம் கார்த்திகேயன், தி.மு.க-வுக்கு வீசும் அலையைத் தெரிந்துகொண்டு, தன் கைக்கு அடக்கமான ஒருவரை வேட்பாளராக்கிக்கொண்டார்’ என்ற கட்சி நிர்வாகிகளின் அதிருப்தியும், அதனால் தேர்தல் பணியில் ஏற்பட்டிருக்கும் சுணக்கமும் இவருக்கு மைனஸ்.
பா.ம.க சார்பில் களமிறங்கியிருக்கும் தேவதாஸுக்கு பா.ம.க-வின் வாக்குவங்கியும், உடையார் சமூக வாக்குகளும் ப்ளஸ். அதேசமயம் பா.ஜ.க-வுடனான கூட்டணி காரணமாக உருவாகியிருக்கும் அதிருப்தி வாக்குகள் அ.தி.மு.க-வுக்குச் செல்வது மைனஸ்.
அ.தி.மு.க மற்றும் கூட்டணி வாக்குகளும், தி.மு.க தரப்பின் பணிச் சுணக்கமும், தன் ‘பசை’ பலமும் கைகொடுக்க குமரகுரு ரேஸில் முந்துகிறார். அவரைத் துரத்தி மலையரசன் இரண்டாம் இடம் பெறுகிறார். மூன்றாமிடம் தேவதாஸுக்கு!
தி.மு.க-வில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க-வில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க-வில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியில் கலாமணி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
முன்னாள் மேயர், முனைவர் பட்டம் போன்ற தகுதிகள் கணபதி ராஜ்குமாருக்கு டீசன்ட்டான இமேஜைக் கொடுத்திருக்கின்றன. களத்தில் செந்தில் பாலாஜி இல்லாததால், தேர்தல் பணியில் சுணக்கம் தெரிவது மைனஸ். தொகுதியில், மும்முனைப் போட்டி நிலவிவரும் சூழலில், கூட்டணி பலம் தி.மு.க-வுக்குச் சாதகம். சிறுபான்மைச் சமூக வாக்குகள்,
ஜி.எஸ்.டி-யால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினர் மற்றும் மத்திய அரசு மீதான அதிருப்தி வாக்குகள் தங்கள் பக்கம் சாயும் என நம்புகின்றனர். கோவை வெற்றி கௌரவப் பிரச்னை என்பதால், ஸ்வீட் பாக்ஸுகளை தாராளமாக இறக்கிவருகின்றனர்.
அ.தி.மு.க வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு இளைஞர்கள், நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. தொடக்கத்தில் சுறுசுறுப்பாக இருந்த அ.தி.மு.க-வின் செயல்பாடுகள், போகப் போக தொய்வடைந்ததால், போட்டியிலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. “தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க கரைந்துவிடும்” என்ற அண்ணாமலையின் கருத்து கட்சித் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், களத்தில் போதிய வேகமில்லை.
‘சிறுபான்மைச் சமுதாயத்தைத் தவிர மற்ற அனைத்துப் பிரிவுகளும் அண்ணாமலைக்கு ஆதரவு’ என்ற தோற்றத்தை ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப் குரூப்புகளின் வழியே பரப்பிவருகின்றனர் பா.ஜ.க-வினர். அந்தப் பிரசாரம் அண்ணாமலைக்கு ஆதரவாகத் தொகுதிக்குள் எடுபடவும் தொடங்கியிருக்கிறது. தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் கவுண்டர் சமுதாய வாக்குகளை அறுவடை செய்ய கிராமம் கிராமாகச் சுற்றுகிறார் அண்ணாமலை. இருப்பினும், ஜி.எஸ்.டி உள்ளிட்ட நெருக்கடிகளால் பா.ஜ.க மீதான அதிருப்தியைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார். சறுக்கல்களைச் சரிசெய்ய, சுமார் 100 ஸ்வீட் பாக்ஸுகளைக் களத்தில் இறக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகளை அள்ளியது நாம் தமிழர் கட்சி. இந்த நிலையில், தற்போது கலாமணி பெறப்போகும் வாக்குகள் முன்னணி வேட்பாளர்களைக் கலக்கத்தில் ஆழ்த்திவருகின்றன.
தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் மூன்றாகப் பிரிவது, கூட்டணி செல்வாக்கு உள்ளிட்ட காரணங்களால் கணபதி ராஜ்குமார் முதலிடத்தைக் கைப்பற்றுகிறார். இந்த நிலையில், இரண்டாமிடத்துக்கு அ.தி.மு.க – பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசிகட்ட பட்டுவாடா சூட்சுமங்கள் இரண்டாமிடம், மூன்றாமிடத்தைத் தீர்மானிக்கலாம்!
தி.மு.க வேட்பாளராக டாக்டர் ராணி குமார், அ.தி.மு.க கூட்டணியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பா.ஜ.க கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், நாம் தமிழர் கட்சியில் இசை மதிவாணன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
அரசு வேலையை உதறிவிட்டு அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார் டாக்டர் ராணி குமார். இவருடைய பெரியப்பா துரைராஜ், சங்கரன்கோவில் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. மேலும், கனிமொழி எம்.பி-யின் ஆதரவும் இவருக்கு ப்ளஸ். தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் இஸ்லாமியர் மற்றும் தி.மு.க ஆதரவு பட்டியலினத்தவர் வாக்குகள் சிந்தாமல் கிடைக்கும் என்பதால், தெம்பாக இருக்கிறார். ஆனால், தொகுதியில் கண்டுகொள்ளப்படாத கனிம வளக் கொள்ளை, சிட்டிங் எம்.பி தனுஷ் எம்.குமார் மீதான அதிருப்தி, அனுசரணை இல்லாத தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் என மைனஸ்களுக்கும் குறைவில்லை.
டாக்டர் கிருஷ்ணசாமி, தேர்தலுக்கு முன்பிருந்தே களப்பணியாற்றத் தொடங்கிவிட்டார். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர், இரட்டை இலைச் சின்னம், சூழ்நிலையறிந்த பிரசாரம் ஆகியவை இவருக்குப் ப்ளஸ். ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு முன்னும் பின்னும் கிருஷ்ணசாமி எடுத்த நிலைப்பாடுகள் நடுநிலை வாக்காளர்களிடையே அவர்மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது மைனஸ்.
முதன்முறையாக தென்காசி தொகுதியில் களமிறங்கியிருக்கிறார் ஜான் பாண்டியன். பூர்வீக மாவட்டம், சொந்த பந்தம் என சென்டிமென்ட்டாகப் பேசி பிரசாரம் செய்துவருகிறார். பட்டியலினத்தவர் வாக்குகளும், கனிம வளக் கொள்ளைக்கு எதிரான பிரசாரமும் இவருக்குப் ப்ளஸ். தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாத டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்… பா.ஜ.க-வில் மாநில ‘ஸ்டார்ட் அப்’ பிரிவுத் தலைவர் ஆனந்தனுக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டதால், திசை மாறும் அவருடைய ஆதரவுக் கட்சி வாக்குகள்… வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் இஸ்லாமியர்கள் வாக்குகள் ஆகியவை பெருமளவில் சேதாரம் விளைவிப்பது ஜான் பாண்டியனுக்கு மைனஸ்.
டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனின் நேரடி மோதலால், பிரியும் பட்டியலினத்தவர் வாக்குகளால், டாக்டர் ராணி குமாரின் தேர்தல் ஆபரேஷன் சக்சஸ் ஆகிறது. இரட்டை இலைக்கான வாக்குகளால் இரண்டாம் இடத்துக்கு வருகிறார் கிருஷ்ணசாமி. ஜான் பாண்டியனுக்கு மூன்றாமிடம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY