ஏற்கெனவே சூடாக இருக்கும் ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒருசேர நடக்க இருப்பதால், மேலும் அந்த மாநிலம் சூடாகியிருக்கிறது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகளை கைப்பற்றி வெற்றிவாகை சூடியிருந்தார், ஜெகன் மோகன் ரெட்டி. `இந்த முறையும் வெற்றிக்கனி நமக்குத்தான்’ என்று தெம்பாக வளம் வந்தார். ஆனால் தெலங்கானாவில் சந்திரசேகர ராவுக்கு மரண அடி கொடுத்தது காங்கிரஸ். இது ஜெகனுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. போதாக்குறைக்கு தங்கையுடனான மோதல் அவருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது ஆட்சி அதிகாரத்தை ஜெகன் கைப்பற்றுவதற்கு அவரது தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளாவின் பங்கும் மிக முக்கியமானது. அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார், ஷர்மிளா. ஆனால் அண்ணன், தங்கைக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ‘ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி’ என்ற பெயரில் தனிக்கட்சியை ஆரம்பித்து தெலங்கானா அரசியலில் களம் கண்டார். பிறகு தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்து, ஆந்திர அரசியல் களத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இது ஆந்திராவை கைவிட்டு போனதாக வருத்தத்தில் இருந்த காங்கிரஸுக்கும், ஆந்திர காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.
எனவே அவரை வைத்து இழந்த செல்வாக்கை மீட்க தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக காய் நகர்த்தி வருகிறார் சந்திரபாபு நாயுடு. ஜெகனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக பவன் கல்யாண், பா.ஜ.கவுடன் கைகோத்து இருக்கிறார். இதேபோல் ஊழல் புகாரில் பல ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிக்கி இருப்பதால், களம் தனக்குச் சாதகமாக இல்லை என்பதை ஜெகன் மோகன் ரெட்டி நன்கு உணர்ந்திருக்கிறார். இதனால் மாநிலம் முழுவதும் பேருந்து மூலம் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இவ்வாறு ஜெகன், ஷர்மிளா, சந்திர பாபு என மும்முனை போட்டி நிலவி வருவதால், ஆந்திர அரசியலில் அனல் காற்று வீசி வருகிறது.
இந்தச் சூழலில்தான் கல் வீச்சு சம்பவங்களும் ஆந்திர அரசியலில் இணைந்து இருக்கிறது. அதாவது கடந்த 13.4.2024 அன்று விஜயவாடாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார், ஜெகன். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த ஜெகன் மோகன்மீது மர்ம நபர்கள் தூரத்திலிருந்து பூக்களை வீசினர். அதில் இருந்த கல் பட்டு, ஜெகன் மோகனின் புருவத்துக்கு சற்று மேல் ரத்தக் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த அதிகாரிகள் முதலுதவி செய்தனர். இதற்கு சந்திரபாபு நாயுடுதான் காரணம் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
முன்னதாக, “2019-ல் ‘துரோகி’ ஜெகனை நம்பி, அவருக்கு ஆதரவாக வாக்களித்தீர்கள். பால் கொடுக்கும் பசுவை விட்டுவிட்டு எருதை தேர்ந்தெடுத்ததால், ஐந்தாண்டுகளாக மக்களை அது உதைத்துக் கொண்டே இருந்தது. இப்போது, ஒரு கல்லையோ அல்லது கையில் கிடைக்கும் எதையோ எடுத்துக் கொண்டு அவர்களை விரட்டியடியுங்கள்” எனச் சந்திரபாபு நாயுடு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், “எனக்கும் கல் வீச்சு சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஒரு நாடகம்” என கருத்து தெரிவித்து இருந்தார், சந்திரபாபு. இது ஜெகன் ஆதரவாளர்களை மேலும் கொதிப்படைய செய்தது.
இந்தச் சூழலில், கஜுவாகா பகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார், சந்திரபாபு. அவர்மீது மர்ம நபர்கள் கல் வீசினர். அப்போது சந்திரபாபு கீழே குனிந்து கொண்டார். இதனால் காயம் ஏதும் படவில்லை. இதேபோல் தெனாலி பகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டு இருந்தார் பவன் கல்யாண். அப்போது அங்கு வந்த சிலர் கல்லை வீசி தாக்க முயன்றனர். உடனடியாக அவர்களை பவன் ஆதரவாளர்கள் விரட்டி பிடித்து, போலீஸில் ஒப்படைத்தனர். இரு வேறு இடங்களில் நடந்த கல் வீச்சு சம்பவங்களில் சந்திரபாபு, பவன் கல்யாணுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், ‘ஜெகன் கோஷ்டிதான் காரணம். தேர்தலில் வெற்றி பெற்று அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்’ என சந்திரபாபு தரப்பு கொதிக்கிறது. இதனால் அதகளமாகி இருக்கிறது ஆந்திர அரசியல் களம்!