விக்ரமின் பிறந்தநாள் (ஏப்ரல் 17) இன்று. ‘சேது’ ‘பிதாமகன்’, ‘தெய்வத் திருமகள்’ ‘ஐ’ என தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அதன் கதாபாத்திரத்திற்காக தன்னையே வருத்தி, செதுக்கி நியாயம் செய்கிறவர் ‘சியான்’ விக்ரம். நமக்குத் தெரிந்த விக்ரம் பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய பக்கங்கள் இங்கே…
* பி.சி.ஶ்ரீராம் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் ‘மீரா’. அந்தப் படத்தின் போஸ்டர் டிசைன்களில் விக்ரமைப் பார்த்த கமல்ஹாசன், அவரை நேரில் கூப்பிட்டு பாராட்டியிருக்கிறார். விக்ரம் டப்பிங் கலைஞர் என்பதையும் அறிந்த கமல் தான் தயாரித்த ‘குருதிப் புனல்’ படத்தில் ஒரு கேரக்டருக்கு டப்பிங் பேச வேண்டும் என அழைத்தார். விக்ரமோ, அர்ஜுனுக்கு டப்பிங் பேசத்தான் அழைத்திருப்பார்கள் என எண்ணிக்கொண்டு போனார். ஆனால், அவர் அர்ஜுனுக்குப் பேசவில்லை. ஒரு தீவிரவாதி கேரக்டருக்காக டப்பிங் பேசினார். அதன் பின், பல வருடங்கள் கழித்து கமல் தயாரித்த் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்திருக்கிறார்.
*ரசிகர்களுக்குத்தான் அவர் ‘சியான்’ விக்ரம். ஆனால் அவரது பள்ளி, கல்லூரி நண்பர்கள் இன்னும் அவரை ‘கென்னி’ என்றே அழைத்து வருகின்றனர். கென்னடி என்ற இயற்பெயரைத்தான் செல்லமாக கென்னி என்கிறார்கள்.
* மொழிகள் கடந்து பல படங்களையும் பார்த்து ரசிப்பார் விக்ரம். அதிலும் கமலின் படங்களில் ’16 வயதினிலே’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ என பல படங்களை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக ’16 வயதினிலே’வை நூறு முறையாவது பார்த்திருப்பார். அதில் வரும் சப்பானி கேரக்டர் போல ஒரு கேரக்டரில் நடித்து விட வேண்டும் என்பது அவரது நீண்ட வருட ஆசைகளில் ஒன்று. அதைப் போல எம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’யும் சிவாஜியின் ‘நவராத்திரி’யும் அவரது ஃபேவரிட் படங்களில் இடம்பெறும்.
* விக்ரம், `சியான்’ விக்ரம் ஆவதற்கு முன்னால் டப்பிக் கலைஞராக இருந்திருக்கிறார். அவர் டப்பிங் பேசியதில் ரொம்பவும் பிடித்த படம், 1982 -ல் வெளியான ‘காந்தி’ திரைப்படமாகும். ரிச்சர் அட்டர்ன் பரோ இயக்கியிருப்பார். அதில் காந்தி கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியவர், இளம் வயது காந்திக்காகவும் வாய்ஸை மாற்றி, பேசி இருப்பார். அதை இப்போதும் மறக்காமல் நினைவு கூறுவார் விக்ரம்.
* சினிமா தவிர போட்டோகிராபி, வெளிநாட்டு பறவைகள் வளர்ப்பு என வித்தியசமான ஹாபியில் சிறகடிப்பார். அதே சமயம், துருவ் விக்ரமிற்கும் போட்டோகிராபிதான் ஹாபி. அப்பாவை விட, பிரமாதமாக படங்கள் க்ளிக்குவார். துருவ்வின் போட்டோகிராபி சென்ஸை பார்த்து விக்ரமே வியந்து ரசித்திருக்கிறார்.
* ‘தங்கலான்’ படப்பிடிப்பு கோலார் தங்கவயல், ஒகேனக்கல் என பல இடங்களில் நடந்தது. அதன் ஒவ்வொரு லொக்கேஷன்களையும் தனது காமிராவில் ஷூட் செய்து வைத்திருக்கிறார். அத்தனையும் இயற்கை காட்சிகளின் கலெக்ஷன்களாக கண்களை விரிய வைக்கும். அதே போல, படப்பிடிப்பில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களையும் க்ளிக் செய்து, அவர்களிடமே காட்டி ஆச்சர்யப்படுத்துவார். படத்தின் ஸ்டில் போட்டோகிராபர்களிடம் இல்லாத லென்ஸ் வகையாறாக்கள் கூட, விக்ரமிடம் இருக்கும் என்பார்கள்.
* ஜிம்மில் உடலை இழைத்தாலும் கூட, நடைபயிற்சியை தவறாமல் கடைபிடிப்பார். அவரது வீடு பெசன்ட் நகர் கடற்கரை ஏரியாவில்தான் என்பதால், இப்போதும் வாய்ப்பு கிடைக்கையில், அதிகாலை பீச்சில் நடைபயிற்சியில் இறங்கிவிடுவார் சியான்.
* படப்பிடிப்பிலும் சரி, வெளியிடங்களிலும் சரி தன்னைச் சுற்றி இருப்பவர்களை கலகலக்க வைத்திருப்பார் விக்ரம். அதே சமயம் மொபைல் போனை அதிகம் பயன்படுத்த மாட்டார். செல்போனை விரும்பாத செலிபிரிட்டிகளுள் அவரும் ஒருவர்.
* விக்ரம் நடித்ததில் அவருக்கு நெருக்கமான படங்களின் பட்டியலில் ‘பீமா’, ‘கிங்’, ‘மஜா’ ஆகிய படங்களுக்கு தனி இடமுண்டு. அதில் ‘பீமா’வுக்காக ரொம்பவே மெனக்கிட்டு நடித்திருப்பார். அந்தப் படம் சரியாக போகாததில் அவருக்கு இன்னமும் மிகப்பெரிய வருத்தம் இருக்கிறது என்பார்கள். துருவ் விக்ரமிற்கும் ரொம்பவே பிடித்த படம் ‘பீமா’ தான். அப்பாவின் படங்களில் ‘பீமா’வை ரீமேக் செய்து, தானே நடித்துவிட வேண்டும் என எண்ணம் துருவ்விற்கு உண்டு.
* ‘பிதாமகன்’ படத்தில் உதவி இயக்குநராகவும் வேலை செய்திருப்பார் விக்ரம். அதன் டைட்டில் கார்ட்டில் கூட விக்ரமை ‘இணை இயக்குநர்’ என்று கார்டு போட விரும்பியிருக்கிறார் பாலா. ஆனால் அதனை விக்ரம் மறுத்துவிட்டார். அதைப் போல ‘சேது’ படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தார். அப்போது மிஸ் ஆன விருது ‘பிதாமக’னுக்குத்தான் தேடி வந்தது. இதற்கிடையே தனது டைரக்ஷன் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து, இன்று வரை தொடர்கிறார்.