ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் நேற்று எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள டானா டோராஜா என்ற இடத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த சூழலில் நேற்று (ஏப்.17) சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை ஐந்து முறை வெடித்துச் சிதறியதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அப்பகுதி முழுவதும் உஷார் நிலை அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் 800 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் எரிமலையை சுற்றி ஆறு கி.மீ தொலைவுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் இருக்கக் கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுனாமி தாக்கக்கூடிய ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சமீபத்திய நிலநடுக்கங்களால் டெக்டானிக் அடுக்குகளில் ஏற்பட்ட தாக்கமே இந்த எரிமலை வெடிப்புக்கு காரணமாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.