நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) தொடங்குகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வை வீழ்த்த ஒன்றிணைந்து `இந்தியா கூட்டணி’யாக உருவெடுத்திருக்கும் எதிர்க்கட்சிகள், `ஜனநாயகத்தை காப்பற்றுவதற்கான தேர்தல் இது. மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே சட்டம் எனத் திணிப்பார்கள். இஸ்லாமியர்கள் குடியுரிமை பறிக்கப்படும்’ என்று கூறி வருகின்றன.
அதற்கேற்றார்போல, பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையிலும் ஒரே நாடு ஒரே தேர்தல், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை இடம் பெற்றிருந்தன. மேலும், `நிலையான ஆட்சி’ என்ற முழக்கத்தை பா.ஜ.க முன்வைத்து வருகிறது.
இந்த நிலையில், `ஒரே நாடு ஒரே மொழி என்றால் தமிழர்களை எப்படி தமிழ் பேச வேண்டாம் என்று உங்களால் கூற முடியும்?’ என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வியெழுப்பியிருக்கிறார். கேரளாவின் கோட்டயம் பகுதியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தலைவர் என்று பிரதமர் பேசுவதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அப்படியென்றால், தமிழ் மக்களை தமிழ் பேசாதே என்றும், கேரள மக்களை மலையாளம் பேசாதே என்றும் உங்களால் எப்படிக் கூற முடியும்…
மற்ற மொழிகளைப்போலவே ஒவ்வொரு இந்திய மொழியும் முக்கியமானவை. மொழி, இருப்பிடம், சாதி, மதம் அடிப்படையில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பா.ஜ.க இந்த நாட்டை பிளவுபடுத்துகிறது” என்று கூறினார்.
கேரளாவிலுள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி (நாடாளுமன்றத்தி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு) வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதில், கடந்த தேர்தலில் வென்ற வயநாடு தொகுதியிலேயே ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.