டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விலை உயர்ந்த ஆடம்பர கார்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், சுமார் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அமைய இருக்கும் ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களாக இருக்கும் எனவும், அதில் மூன்றில் ஒரு பகுதி ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோக இந்த ஆலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் உள்பட மற்ற கார்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. ஆலை ராணிப்பேட்டையில் அமையவிருப்பதாக கூறப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்குள் பெரும்பாலான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றுவதற்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எனவே, ராணிப்பேட்டை ஆலை எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முக்கிய மையமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக, எலெக்ட்ரிக் கார் உற்பத்தி சார்ந்த மற்ற உப ஆலைகளும் இந்தப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டு வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவது கூடுதல் பலம்.