துபாய்: துபாய் மழை வெள்ளத்தால் முக்கிய விமான போக்குவரத்து முனையமான துபாய் விமான நிலையத்தின் சேவை தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் டெர்மினல் 1-ல் விமானங்கள் இறங்க அனுமதிக்கப்பட்டாலும்கூட மற்ற விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. துபாய் நகர சாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் நகரவாசிகள் தங்களின் வாகனங்களை மீட்க முடியாமல் அவற்றைக் கைவிடும் சூழலில் உள்ளனர்.
துபாயில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக துபாய் நகரம் இன்னும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தப் பெருமழை குறித்து இது ‘வரலாறுகாணாத வானிலை நிகழ்வு’ என்றும், கடந்த 1949-ம் ஆண்டு முதல் இப்படி ஒரு மழை பெய்தது இல்லை என்றும் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான WAM தெரிவித்துள்ளது.
இதனிடையே துபாய் மழை வெள்ளத்தால் முக்கியமான போக்குவரத்து முனையமான துபாய் விமான நிலையம் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. விமான ஓடுதளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் டெர்மினல் 1-ல் விமானங்கள் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன அல்லது தடைபட்டுள்ளன என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாய் நகரத்தின் சாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் நகரவாசிகள் தங்களின் வாகனங்களை மீட்க முடியாமல் அவற்றைக் கைவிடும் சூழலில் உள்ளனர். “வெள்ளத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து எனது காரை மூழ்கடித்ததை கையறு நிலையில் நின்று நான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்” என்று பாதிக்கப்பட்ட நகரவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகம்மது பின் ஷியாத் அல் நஹியன், “குடிமக்களின் பாதுகாப்பே எனது அரசின் முதன்மையான நோக்கம்” என்று தெரிவித்தார். மேலும், கடுமையான மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுமாறும், நாட்டின் உள்கட்டமைப்பை ஆய்வு செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய பெருமழைக்கு ஐக்கியஅரபு அமீரகம் செயற்கை மழைக்காக மேக விதைப்பு காரணமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டு வரும்நிலையில், அது உண்மையில்லை என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், “மேக விதைப்பு எதுவும் நிகழ்த்தப்படவில்லை. தவறாக பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்பவேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
வானிலை நிபுணர்களின் கூற்றுப்படி துபாயில் இன்னும் சிலநாட்களில் நிலை சீராகும். நகரில் சில இடங்களில் மேகமூட்டம் காணப்படும் என்று வளைகுடா செய்திகள் தெரிவித்துள்ளன.