மதுரை: மதுரையில் பிள்ளையார் கோயிலில் பூஜை செய்து வழிப்பட்ட பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் தளவாட பொருட்களை அதிகாரிகள் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடக்கிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் 1,160 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வந்து வாக்களிக்க தேவையான குடிநீர், நிழல் பந்தல் போன்றவை அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள், தளவாட பொருட்கள் போன்றவை ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மதுரை மாநகராட்சி 2-வது மண்டலம் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள், அந்த அலுலகத்தின் அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் பூஜை செய்து வழிப்பட்ட பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் தளவாட பொருட்கள் வைக்கப்பட்ட அறைக்கும் பூஜை செய்தனர். அதன் பிறகே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்தனர்.
வாக்குசாவடிகளை அமைத்த தேர்தல் ஆணையம், போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என இன்று மதியம் வாக்குச்சாவடிகளுக்கு சென்ற தேர்தல் அலுவலர்கள் புலம்பினர். கழிப்பறை வசதி சுகாதாரமாக இல்லை என்றும், குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
போலீஸார், தேர்தல் அலுவலர்கள் நேற்று தங்கும்போது அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் குடங்களை பெற்று தண்ணீரை வாங்கி பயன்படுத்தினர். மேலும், கிராமங்களில் பணிபுரியும் தேர்தல் அலுவுலர்களுக்கு சாப்பாடு வாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.
தேர்தல் அலுவலர்கள் குடும்பத்தினர், நகர் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் சாப்பாடு வாங்கிச் சென்று வழங்கினர். தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடிகளை ஒதுக்கீடு செய்தால் மட்டும் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதுகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோன்ற வாக்குச்சாவடிகளில் நிலவும் குறைபாடுகளாலே தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பணிக்கு செல்வதற்கு தயக்கம் அடைகின்றனர்.