மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டாயம் தங்களது சொத்து விபரங்களை வேட்பு மனு விண்ணப்பத்தோடு சேர்த்துக்கொடுக்கவேண்டும். அந்த வகையில் தெற்கு கோவாவில் பா.ஜ.க சார்பாக போட்டியிடும் பல்லவி டெம்போ தனக்கு ரூ.1400 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சொத்து விபரங்களை 119 பக்கத்திற்கு தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.
கால்பந்து, ரியல் எஸ்டேட், கப்பல் கட்டுதல், கல்வி நிறுவனங்கள் மற்றும் சுரங்கத்தொழிலில் ஈடுபட்டுள்ள டெம்போ குரூப் நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீனிவாஸ் டெம்போவை பல்லவி திருமணம் செய்துள்ளார். இதன் மூலம் தனக்கு ரூ.255.4 கோடிக்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், தனது கணவருக்கு ரூ.994.8 கோடிக்கு அசையும் சொத்து இருப்பதாக பல்லவி குறிப்பிட்டுள்ளார். அதோடு அசையா சொத்துக்களாக தனக்கு ரூ.28.2 கோடி சொத்தும், தனது கணவருக்கு ரூ.83.2 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சொத்துக்கள் கோவா மற்றும் நாட்டின் இதர பகுதியில் இருக்கிறது. இவை தவிர துபாயில் இத்தம்பதி பெயரில் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.2.5 கோடிக்கு அபார்ட்மெண்ட் இருப்பதாகவும், லண்டனில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட் இருப்பதாகவும் பல்லவி குறிப்பிட்டுள்ளார். மேலும் ரூ.5.7 கோடிக்கு தங்க ஆபரணங்கள் இருப்பதாகவும் பல்லவி தெரிவித்துள்ளார்.
பல்லவியிடம் 3 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும், மகேந்திரா உட்பட வேறு இரண்டு கார்கள் இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.2.5 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். வங்கியில் டெபாசிட்டாக ரூ.9.9 கோடி இருப்பதாகவும், மும்பையில் ரூ.25 கோடிக்கு ஆடம்பர வீடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 1361.4 கோடிக்கு சொத்து இருப்பதாக பல்லவி தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
49 வயதாகும் பல்லவி புனேயில் முதுகலைப்பட்டம் படித்துள்ளார். அதோடு தனது கணவரின் நிறுவனங்களில் இயக்குநராகவும் இருக்கிறார். தெற்கு கோவா தொகுதியில் பா.ஜ.க இதுவரை இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. எனவேதான் இம்முறை இத்தொகுதியில் பெண் தொழிலதிபரை பா.ஜ.க நிறுத்தி இருக்கிறது.