குடும்பத்துக்குள்கூட ஈகோ இருக்கலாம்; ஆனால் சாலையில் நிச்சயம் இருக்கக் கூடாது. பெட்ரோல் பங்க்கில் இருந்து சிக்னல்கள் வரை வாகன ஓட்டிகளிடம் நடக்கும் ஈகோக்களை நேரில் பார்த்திருக்கலாம்.
இது சில நேரங்களில் வாய் வார்த்தைகளோடு போய் விடலாம். ஆனால் இதுவே பல நேரங்களில் பேரபாயமாக மாறிவிடும். அண்மையில் ஹைதாராபாத் மாநகரில் ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. லாரி டிரைவர் ஒருவர், பைக் ரைடர் மீது கோபமாகி, அவரது பைக்கை நெருப்பு பறக்க சாலையில் பல மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற நிகழ்ச்சி ஒன்று பார்க்கவே பதற்றமாக இருக்கிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் இப்போது பரபர வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.
லாரி டிரைவர் ஒருவர், சந்திராயன்குட்டா எனும் பகுதியிலிருந்து வனஸ்தாலிபுரம் எனும் ஏரியாவுக்குத் தனது லாரியில் சிமென்ட் லோடு அடித்துச் சென்றுள்ளார். அப்போது அப்துல் மஜீத் என்பவர், லஷ்மி கார்டன் எனும் பகுதியை நோக்கி இரவு 11.45 மணிக்குத் தன் டூவீலரில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது சம்பாப்பேட்டை எனும் பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அந்த சிமென்ட் லாரி தாறுமாறாக ஓடுவதைக் கவனித்தவர், சுதாரிப்பதற்குள் அவரது பைக்கை இடித்திருக்கிறது லாரி.
அப்துல் மஜீத், சாலையின் இடதுபுறம் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். நல்லவேளையாக, டூவீலர் ரைடருக்கு எதுவும் ஆகவில்லை. இதைக் கவனித்த மற்ற வாகன ஓட்டிகளும் மக்களும் லாரியை நிறுத்தச் சொல்லி எச்சரிக்க, பயந்து போன லாரி டிரைவர் வண்டியை நிறுத்தாமல் ஓட்டியிருக்கிறார். அப்போது லாரிக்குக் கீழே அப்துல் மஜீத்தின் பைக் சிக்கிக் கொள்ள, அதையும் பொருட்படுத்தாமல் தீப்பறக்க பைக்கை இழுத்தபடி சிறிது தூரத்துக்கு லாரியை ஓட்டியிருக்கிறார். இதில் மற்ற வாகன ஓட்டிகள் லாரியை நிறுத்தச் சொல்லியும் அவர் நிறுத்தவில்லை. சற்று தூரத்தில் ஒரு காரின் மீது மோதியதில் லாரி நின்றபிறகு, அங்கிருந்து தப்பித்து வனஸ்தாலிபுரம் எனும் ஏரியா காவல்நிலையத்தில் லாரி டிரைவர் சரண்டர் ஆனதாகச் சொல்கிறார்கள். அந்த ட்ரக் டிரைவரின் பெயர் பிருத்விராஜ் என்று தெரிய வந்திருக்கிறது.
இந்த மொத்தச் சம்பவத்தையும் அங்கிருந்த மக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். லாரியில் தொங்கியபடியே வருபவர் வேறு ஒருவரா; அல்லது பாதிக்கப்பட்ட அந்த பைக் ரைடரா என்பது தெரியவில்லை.
லாரி டிரைவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டவில்லை; ஆனால் ஓவர்ஸ்பீடிங்தான் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள் காவல்துறையினர்.