சென்னை: தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது. இன்று பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் உட்பட 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் நேற்று (ஏப்.17) முதல் இயங்கத் தொடங்கின. குறிப்பாக, சென்னையில் இருந்து 684 பேருந்துகள் உட்பட தமிழகம் முழுவதும் 2,621 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் போலவே, சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் உட்பட 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாளை (ஏப்.19) தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்றும் சென்னையில் இருந்து 777 பேருந்துகள் உட்பட தமிழகம் முழுவதும் 2,692 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 17 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
திடீரென பயணத்துக்கு திட்டமிடுவோரின் வசதி கருதியும் பேருந்துகள் இயக்க தயார் நிலையில் உள்ளோம். மீண்டும் ஊர் திரும்பும் வகையில் ஏப். 21-ம் தேதி ஞாயிறன்று 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
முன்பதிவுக்கு tnstc செயலி மற்றும் www.tnstc.in இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்: தேர்தலையொட்டி, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.18, 20-ம் தேதிகளில் அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06005) நண்பகல் 12 மணிக்கு பெங்களூரு ஒயிட்ஃபீல்டு நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக, அங்கிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில் (06006), இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். பெரம்பூர், அரக்கோணம், வாலாஜா சாலை, காட்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காரப்பேட்டையில் நின்று செல்லும். முன்பதிவு தொடங்கியுள்ளது.