சென்னை: “95 சதவீதத்துக்கு மேல் எனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளேன். என் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டது. கரோனா சமயத்தில் நிதி தடுத்து வைக்கப்பட்டது. எனினும், ரூ.17 கோடியில் மீதமிருப்பது ரூ.17 லட்சம் தான்.” என்று கூறி மத்திய சென்னை எம்பியான தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்பியும் மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான தயாநிதி மாறன் வழக்குத் தொடர்ந்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என பேசியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், “என் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என்று ஒரு அவதூறை பொய் என்று தெரிந்தே பேசியுள்ளார். எனக்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்றே பேசியுள்ளார்.
அவருக்கு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், மன்னிப்பு கேட்கவில்லை. அதனால், தான் தற்போது அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். அடுத்த மாதம் 14ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதுவரை 95 சதவீதத்துக்கு மேல் எனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளேன். என் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டது.
கரோனா சமயத்தில் நிதி தடுத்து வைக்கப்பட்டது. எனினும், ரூ.17 கோடியில் மீதமிருப்பது ரூ.17 லட்சம் தான். இபிஎஸ் தோல்வி விரக்தியில் பேசியுள்ளார். சுய நினைவுடன் தான் அவர் பேசுகிறாரா என்று தெரியவில்லை. திமுகவை தாக்கி பேச வேண்டும் என்பதற்காகவே பேசிவிட்டு சென்றுள்ளார். ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியவேண்டும்.
என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளேன். எனது பணியை கொச்சைப்படுத்தி, எனக்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் வகையிலேயே எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சில தினங்கள் முன், மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடுபவர், பணம் படைத்தவர். இந்த தேர்தலைப் பொறுத்தவரை, ஜனநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல். நமது வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுபவர் மிகப்பெரிய கோடீஸ்வரர். இந்தியாவில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர்.
அவர்களிடம் பணமும், அதிகாரமும் இருக்கிறது. திமுக வேட்பாளர் அவருடைய சொந்த நலனுக்காக தேர்தலில் போட்டியிடுகிறார். அவருடைய சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், மேலும், சொத்துக்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும் அவர் போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை எண்ணி பாருங்கள்.” என்று பேசியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கண்டிருந்த தயாநிதி மாறன், “தனது பேச்சுக்கு 24 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும்” என்று எச்சரித்திருந்தார். அதன்படி இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.