Credit Card: கிரெடிட் கார்டுகள் நமது அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குப் பெரிதும் உதவுகின்றன. இதுபோக பல்வேறு சலுகைகளையும் கிரெடிட் கார்டுகள் வழங்குகின்றன. ஒவ்வொரு கார்டிலும் வெவ்வேறு வகையான சலுகைகள் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதுண்டு.
ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதால் சலுகைகள் கிடைத்தாலும்கூட, பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. அவ்வகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவோர் தவிர்க்க வேண்டிய தவறுகள் பற்றிப் பார்க்கலாம்.
கடைசி தேதி
ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் மாதம்தோறும் செலுத்த வேண்டிய தொகைக்கு கடைசி தேதி வெவ்வேறாக இருக்கும். எனவே, எத்தனை கார்டுகள் இருந்தாலும், கடைசி தேதிக்குள் தொகையை செலுத்தி விட வேண்டும். இதன் மூலம் கூடுதல் கட்டணம், வட்டி போன்றவற்றைத் தவிர்க்கலாம். மேலும், உங்களது சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாது.
கடன் வரம்பு
உங்களது கிரெடிட் கார்டுக்கு ஒரு கடன் வரம்பு (credit limit) நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அது, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வரம்பை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என அர்த்தம் இல்லை. சொல்லப்போனால், கடன் வரம்பில் குறிப்பிட்ட விகிதத்தைத் தாண்டும்போது சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே, அதிக கடன் வரம்பு இருந்தாலும்கூட, குறைவாக பயன்படுத்துவது நல்லது. இதனால் நீங்கள் கடன் சுமையில் மாட்டிக்கொள்ளாமலும் இருக்கலாம்.
ஆட்டோ பரிவர்த்தனை
ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் கடைசி தேதியை கவனித்துக்கொண்டு இருக்க விரும்பாதவர்கள், கடைசி தேதிக்கு முன்பாகவே உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தாமாக பணத்தை செலுத்திவிடும் வகையில், ஆட்டோ பரிவர்த்தனை (Auto Payment) முறையைப் பயன்படுத்தலாம்.
முழு கட்டணம்
கிரெடிட் கார்டுகளில் முழு தொகை அல்லாமல் குறைந்தபட்ச தொகையை செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், முடிந்தவரை முழு தொகையையும் செலுத்திவிடுவது நல்லது. இதனால், வட்டியைத் தவிர்த்து, சிபில் ஸ்கோரையும் பாதுகாக்கலாம்.
ரிவார்டுகள்
கிரெடிட் கார்டுகளில் செலவு செய்யும்போது உங்களுக்கு பல்வேறு ரிவார்டுகள் கிடைக்கின்றன. இந்த ரிவார்டுகளை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் ரிவார்டுகளைப் பயன்படுத்தாவிட்டால் அவை காலாவதியாகிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆண்டுக் கட்டணம்
கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, குறிப்பிட்ட சலுகைகளுக்காக நீங்கள் கிரெடிட் கார்டு வாங்கியிருந்தால், அந்த கார்டு தரும் சலுகைகள் உண்மையாகவே உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா, அல்லது ஆண்டுக் கட்டணம் மூலம் பணம் விரயமாகிறதா என்பதைக் கண்டறிந்து, தேவையில்லாத கார்டுகளை நிறுத்திவிடுவது நல்லது.