புதுடெல்லி: நாட்டு நலனுக்காக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், ‘கோடைகாலம் என்பதால் வாக்காளர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறேன். முதல்கட்ட தேர்தலில் வெப்ப அலையை, வாக்கு அலை வீழ்த்தும் என்று நம்புகிறேன்.
உங்கள் பிள்ளைகள், குடும்பம், நகரம், கிராமம், நாட்டின் நலனுக்காக வாக்காளர்கள் அனைவரும் வாக்குரிமையை செலுத்த வேண்டும். வாக்களிப்பதில் இளைய சமுதாயம் புதிய புரட்சியை ஏற்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல்களை பொருத்தவரை கடந்த 2009-ல் 73.02 சதவீதம், 2014-ல் 73.74 சதவீதம், 2019-ல்72.42 சதவீதம் வாக்குகள் பதிவாகின.கடந்த தேர்தல்களைவிட, இந்த ஆண்டுவாக்கு சதவீதத்தை அதிகரிக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாகவும், வாக்காளர்களுக்கு தேவையான வசதிசெய்துள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.