புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியிருக்கும் நிலையில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் உள்ள 92 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் இன்று தொடங்கியிருக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையும்.
அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். எனவே மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
இதைப்போல சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபைக்கும் இன்று தேர்தல் தொடங்கியது. சிக்கிம் சட்டமன்ற தேர்தலில், 146 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகியவை அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4-ம் தேதிக்கு பதிலாக ஜுன் 2-ம் தேதி எண்ணப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.