சண்டிகர்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசனின் 33-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோகித் சர்மா 36 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் வெற்றிக்காக இறுதிகட்டத்தில் போராடிய அசுதோஷ் சர்மா 28 பந்தில் 61 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது,
அற்புதமான இன்னிங்ஸ் ஒன்றை அசுதோஷ் சர்மா விளையாடி இருக்கிறார். நிச்சயம் மைதானம் வந்த ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு இன்னிங்ஸாக அமைந்திருக்கும். இதுபோன்ற அழுத்தமான சூழல்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
நிச்சயம் 2 புள்ளிகளுடன் முல்லன்பூரில் இருந்து செல்வது மகிழ்ச்சி தான். இந்த வெற்றிப் பயணத்தை தொடர விரும்புகிறோம். இந்த ஆட்டத்தில் திலக் வர்மா களமிறங்கிய போது, என்னால் 7 முதல் 8 பந்துகள் வரை ரன்களே சேர்க்க முடியவில்லை. அவர் தான் அதிரடியாக ரன்கள் சேர்த்து என்னை காப்பாற்றினார்.
இதுபோன்ற பிட்ச்களில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது எளிதல்ல. வாழ்வின் சில இன்னிங்ஸ்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருக்கும். இந்த இன்னிங்ஸ் அப்படியான ஒன்று தான். இந்த பிட்ச் கொஞ்சம் வித்தியாசமானது. அதனால் களத்தில் பேட்டிங் செய்யும் போது கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டேன். இந்த அரைசதத்தை ஓய்வறையில் இருக்கும் பயிற்சியாளர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.