கிருஷ்ணகிரி: நடைபெறும் மக்களவைத் தேர்தல் உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே நடக்கின்ற தேர்தல் என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஜின்னா சாலையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இன்று (ஏப்.19) காலை 7.15 மணிக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி எம்எல்ஏ குடும்பத்துடன் வரிசையில் நின்று, வாக்களித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது: “மக்களவைத் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். இன்று கடும் வெயில் இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதனால் காலை 11 மணி வரையிலும் மாலை 4 மணிக்கு பிறகும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்துவார்கள் என நினைக்கிறேன்.
இந்த தேர்தல் உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே நடக்கின்ற தேர்தலாகும். மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிறைவேற்ற முடியாத திட்டங்களையும், ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இருக்கின்றன. இதனால் மக்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளனர். எனவே இந்தத் தேர்தலில் பொய்மைகள் காணாமல் போகும். உண்மை உறுதியாக வெற்றி பெறும்” என்றார்.
கிருஷ்ணகிரியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போது, அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து கேட்டதற்கு, “இது திமுகவினரின் இயல்பு, பொய்மை வன்முறை அவர்களின் நம்பிக்கையாகும்” என்றார்.
அதைத் தொடர்ந்து கேரளாவில் மின்னணு வாக்குப்பதிவு மையத்தில் வந்த புகார் குறித்து கேட்டதற்கு, “தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது என்கிற நம்பிக்கை உள்ளது. ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறும் நாடாக இந்தியா உள்ளது” என்று தெரிவித்தார்.