கராச்சி:
பாகிஸ்தானின் கராச்சி நகரின் கிளிப்டன் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த ஜப்பான் நாட்டவர்கள் 5 பேர், இன்று காலையில் ஏற்றுமதி மண்டலம் நோக்கி வேனில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாவலர்கள் 2 பேர் சென்றனர். புறநகர்ப் பகுதியான லண்டியில் உள்ள முர்தசா சோரங்கி அருகே சென்றபோது, பைக்கில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் வழிமறித்து, வேனில் மோத முயன்றனர்.
இதனால் சுதாரித்த பாதுகாவலர்கள், பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி உயிரிழந்தான். மற்றொரு பயங்கரவாதி, வேன் அருகே சென்று தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் எழுந்தது. இந்த தாக்குதலில் ஜப்பானியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை
இதுபற்றி காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், “பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் ஜப்பானியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் பயணம் செய்த வேன், குண்டு துளைக்காத வாகனம் என்பதால் குண்டுவெடிப்பினால் சேதமடையவில்லை. பாதுகாவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது” என்றார்.