மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத் தொகுதியில் பா.ஜ.க சார்பாக கொம்பெல்லா மாதவி லதா போட்டியிடுகிறார். அவர் ராம நவமியன்று பிரமாண்ட ஊர்வலம் நடத்தினார். இந்த ஊர்வலத்தில் வாகனத்தில் ஏறி நின்றபடி மாதவி லதா கையை அசைத்தபடி சென்றார். சித்தியாம்பர் பஜாரில் வந்தபோது மாதவி லதா கையால் அம்பு எய்வது போன்று சைகை செய்தார். அவர் ஊர்வல பாதையில் இருந்த மசூதியை நோக்கி வில்லை கொண்டு அம்பு எய்வது போன்று சைகை செய்தார். அவர் அவ்வாறு செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
அதேசமயம் இந்த வீடியோ சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஹைதராபாத்தில் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் பா.ஜ.க செயல்படுவதாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஒவைசி குற்றம்சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “ஹைதராபாத் 15 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது.
தெலங்கானா முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது. அதோடு தெலங்கானா மக்களின் தனிநபர் வருமானமும் அதிகரித்துள்ளது. அந்த அமைதியை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. அவர்கள் என்ன செய்ய முயற்சி செய்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முயற்சியை மக்கள் ஏற்கமாட்டார்கள்” என்று தெரிவித்தார். ராம நவமி ஊர்வலத்தின்போது பதற்றம் ஏற்படாமல் இருக்க மசூதி வெள்ளை துணியால் மூடப்பட்டு இருந்தது. பா.ஜ.க வேட்பாளர் சென்ற ஊர்வலத்திற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் ஏற்பாடு செய்திருந்தார்.
சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து ராஜா சிங் கூறுகையில், “மாதவி லதா ஊர்வலத்தில் ஆரம்பத்தில் இருந்தே அம்பு எய்வது போன்று சைகை செய்து கொண்டு வந்தார். அவர் அவ்வாறு செய்யும் போது அந்த வழியில் மசூதி வந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ குறித்து மாதவி லதா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கும் எனது வீடியோ முழுமையான ஒரு வீடியோ கிடையாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த வீடியோவால் யாரது மனமாவது புண்பட்டு இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அனைவரையும் மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மாதவி லதாவின் இச்செயல் குறித்து தேர்தல் கமிஷனில் புகார் செய்ய ஒவைசி முடிவு செய்துள்ளார்.