வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ‘பலாப்பழம்’ சின்னத்தில் போட்டியிடும் நடிகரும், சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் வாக்குப்பதிவு மையங்களை இன்று காலை முதல் பார்வையிட்டு வருகிறார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவரது பலாப்பழச் சின்னம்மீது வெளிச்சம் படாததால் மன்சூர் அலிகான் கடுப்பாகி அங்கிருந்த தேர்தல் அலுவலர்களிடமும் கோபம் காட்டினார். ‘‘இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. முதல் இயந்திரத்தில் பிரதான வாக்காளர்களின் சின்னம் ‘பளீச்’ என்று தெரிகிறது.
ஒன்று, இரண்டு என்று மக்கள் அவர்களின் சின்னங்களை பார்த்து குத்திவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால், இரண்டாவது இயந்திரம் மீது வெளிச்சம் படவில்லை. லைட்டுகளை அணைத்து வைத்திருக்கிறார்கள். இதனால் அதிலுள்ள சின்னங்கள் கண்களுக்கே தெரியவில்லை.
என்னுடைய பலாப்பழச் சின்னமும் இருட்டாகத் தெரிகிறது. அது பூசணிக்காயா அல்லது பலாக்காயா அல்லது வேறு எந்தக் காய் என்றே தெரியவில்லை. கன்னங்கரேல் என்று தெரிகிறது. வேண்டுமென்றே என்னுடைய சின்னம் மறைக்கப்பட்டிருக்கிறதைபோல இருக்கிறது.
அதிகாரிகளிடம் கேட்டால், ‘பக்கத்தில் வி.வி.பேட் இருக்கிறது. அதன்மீது லைட் படக் கூடாது’ என்கிறார்கள். அப்புறம் எப்படி மக்கள் சின்னத்தை பார்ப்பார்கள். வி.வி.பேட் மீது லைட் படக் கூடாது என்றால் அப்புறம் என்ன வெங்காயத்துக்கு மெஷின் வைத்திருக்கிறார்கள். பேசாமல் பேப்பரில் குத்தி ஓட்டுப் போட்டிருக்கலாமே?. ஆயிரத்தெட்டு மெஷின் எதற்கு?. விளக்குப் படாமல் என் சின்னத்தை மறைத்து ரொம்பவும் கேவலப்படுத்துகிறார்கள்’’ என்று கொதித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார், மன்சூர் அலிகான்.