தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் அருகே உள்ள கண்டியங்காடு வாக்குச்சாவடி பசுமை வாக்குச்சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாக்களித்த பின்னர் தேர்தல் பணியாளர்களால் வாக்காளர்களுக்கு விதைப்பந்து வழங்கப்படுகிறது. அப்போது மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுத்துகின்ற செயலை செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தினர்.
தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும், வாக்கிற்கு பணம் வாங்க கூடாது என்பது உள்ளிட்ட பல விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தியது. அதே போல் பசுமை பாதுகாப்பதற்கான, மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பசுமை வாக்குச்சாவடி அமைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று வாக்குச்சாவடிகள் பசுமை வாக்கு சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட ஒன்றை பறைசாற்றுகின்றனர்.
அந்த வகையில் மதுக்கூர், கண்டியங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குசாவடியில் வாக்காளர்களுக்கு விதைப்பந்து வழங்கப்பட்டது. இது குறித்து மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஷ்வரியிடம் பேசினோம், ”வாக்களிப்பது எவ்வளவு அவசியமோ அதற்கு இணையானது பசுமையை பாதுகாக்க வேண்டியதும். மாறி வரும் கால நிலையை எதிர் கொள்வதற்கு பசுமையை பாதுகாப்பதும், பராமரிப்பதும் முக்கியமானது.
அந்த வகையில் கண்டியங்காடு கிராமத்தில் அமைக்கப்பட்ட பசுமை வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு விதைப்பந்து வழங்கினோம். தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப் கண்காணிப்பில், என் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் விதைப்பந்து தயாரிக்கப்பட்டது.
ஒரு வாரத்திற்கு முன்பு நூறு அங்கன்வாடி பணியாளர்கள் இதில் ஈடுப்பட்டதுடன் ஆயிரம் விதைப்பந்துகள் தயார் செய்து வாக்குச்சாவடியில் வைத்தனர். வாகை, புளி போன்ற பாரம்பர்ய ரகங்களின் விதைகள் விதைப்பந்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் விதைப்பந்து வழங்கினோம்.
ஒரு மாதம் வரை ஈரப்பதம் தாங்க கூடிய வகையில் விதைப்பந்து தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் விதைப்பந்தை தங்களுடைய வீடு அமைந்துள்ள இடத்தில் போட்டு விட்டால் அதில் உள்ள விதை செடியாக வளர்ந்து மரமாகும் இதனால் அந்த கிராமமே செழிப்பாகும். இதை அடிப்படையாக கொண்டும், அனைவரும் பசுமையை பின்பற்றவும், பசுமையை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விதைப்பந்து வழங்கப்பட்டது. இதற்கு வாக்காளர்கள் மத்தியில் வெகுவாக கிடைத்த வரவேற்ப்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது” என்றார்.