பீகார்,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் நேற்று (19-ம் தேதி) நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அந்த வகையில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்றது. இதையடுத்து, வரும் 26ம் தேதி 2ம் கட்டமாகவும், மே 7ம் தேதி 3ம் கட்டமாகவும், மே 13ம் தேதி 4ம் கட்டமாகவும், மே 20ம் தேதி 5ம் கட்டமாகவும், மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜுன் 1ம் தேதி 7ம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
முதற்கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்ட தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பீகாரின் பகல்பூரில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது,
பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். இணைந்து நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கிறது. ஆனால், அதை தடுத்து அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற இந்தியா கூட்டணி போராடுகிறது.
நாட்டின் ஏழைகள், தலித் மக்கள், பழங்குடியினர் பெற்ற பலன்கள் அனைத்தும் அரசியலமைப்பால் கிடைத்தவை. அரசியலமைப்பு அழிந்துவிட்டால் பலன்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். மோடியின் ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர். நாட்டின் 70 சதவிகித மக்கள் வைத்துள்ள மொத்த வளத்திற்கு சமமான வளத்தை நாட்டின் 22 பேர் வைத்துள்ளனர். இதை நாங்கள் மாற்ற நினைக்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.