இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம்

பெங்களூரு: ''நடிகரும், கணவருமான புவனை ஒரு கும்பல் தாக்கியது தொடர்பாக, நாம் பாகிஸ்தானில் இருக்கிறோமா,'' என்று, நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் அடைந்து உள்ளார்.

கன்னட திரை உலகில் இளம் நடிகர் புவன், 34. இவரது மனைவி ஹர்ஷிகா பூனாச்சா, 33. இவரும் நடிகை ஆவார். நேற்று முன்தினம் இரவு, ஹர்ஷிகா பூனாச்சா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டார். 'பெங்களூரு புலிகேசிநகரில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம். மோசமான அனுபவத்தை சந்தித்தோம்' என்று கூறி இருந்தார். அந்த பதிவு பரவியது.

தங்க செயின்

இதுகுறித்து, ஹர்ஷிகா பூனாச்சா நேற்று அளித்த பேட்டி: கடந்த 4ம் தேதி இரவு புலிகேசிநகர் மஸ்ஜித் சாலையில் உள்ள, 'கராமா' என்ற ஹோட்டலுக்கு புவன், நான், குடும்பத்தினர் சாப்பிட சென்றோம். சாப்பிட்டு முடித்து வெளியே வந்து, காரில் அமர்ந்து இருந்தோம். புவன் காரை 'ரிவர்ஸ்' எடுக்க முயன்றார். அப்போது இரண்டு பேர் வந்து, கார் நீளமாக உள்ளது. திடீரென 'ரிவர்ஸ்' எடுத்தால், எங்கள் மீது மோதிவிடும் என்று கூறினர்.

காரை 'ரிவர்ஸ்' எடுக்கவில்லை என்று, புவன் கூறினார். ஆனாலும் அந்த இருவரும், ஆபாசமாக பேசினர். திடீரென அங்கு 20 பேர் கூடினர். புவனிடம் தகராறு செய்ததுடன், அவரை தாக்கினர். அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்தனர். சுதாரித்து கொண்ட புவன், தங்க செயினை பிடித்து கொண்டார். என்னிடம் தங்க செயினை கொடுத்த போது, அது பாதி அறுந்து போனது.

கன்னடத்திற்கு எதிர்ப்பு
புவன் கன்னடத்தில் பேசியதற்கு, அந்த கும்பல் எதிர்ப்பு தெரிவித்தது. ஹிந்தி, உருதில் பேசினர். காரில் குடும்பத்தினர் இருந்ததால், பிரச்னை வேண்டாம் என்று நினைத்தோம். ஆர்.டி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எங்களுக்கு தெரிந்தவர் என்பதால், அவரிடம் மொபைல் போனில் பேசினோம். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. சிறிது துாரத்தில் ஏ.எஸ்.ஐ., ஒருவர் நின்றார். அவரிடம் நடந்த பிரச்னையை கூறினோம். ஆனால், அவர் கண்டு கொள்ளவில்லை. இந்த சம்பவம் என்னை மனதளவில் பாதித்தது.

நான் வாழும் ஊரில் வெளியே செல்லவே பயமாக இருக்கிறது. நாம் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் வாழ்கிறோமா, கர்நாடகாவில் கன்னடத்தில் பேசுவது தவறா என்ற கேள்வி, என் மனதில் எழுகிறது. பிரச்னையை அப்படியே விட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால், எங்களை போன்று யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதால், பிரச்னையை வெளி கொண்டு வந்து உள்ளேன். இன்னும் போலீசில் புகார் செய்யவில்லை. மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.