பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு நற்பெயர் இருப்பதால் காங்கிரஸ் கட்சி 20 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 8 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் தனித்து களமிறங்கியுள்ள நிலையில், பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 25 இடங்களில் காங்கிரஸும் பாஜகவும் நேருக்கு நேர் மோதுவதால் கடும் போட்டி நிலவுகிறது. 3 கட்சிகளின் தலைவர்களும் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியது: “கர்நாடகாவில் எனது தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு மக்களிடையே நல்ல பெயர் இருக்கிறது. மகளிருக்கு ரூ.2 ஆயிரம், பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம், இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணம், 10 கிலோ அரிசி ஆகிய உத்தரவாத திட்டங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் மக்கள் காங்கிரஸை ஆதரிக்க முடிவெடுத்துள்ளனர்.
கடந்த தேர்தலில் பாஜக 25 இடங்களில் வென்றது. காங்கிரஸ் ஓர் இடத்தில் மட்டுமே வென்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 20 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும். காங்கிரஸுக்கு ஆதரவான அலையை உணர முடிகிறது. நாட்டின் பிற பகுதிகளின் நிலை எனக்கு தெரியாது” என்றார்.