சத்தீஸ்கர்: நக்சலைட்டுகளுக்கு எதிரான `அட்டாக்’… போலி என்கவுன்டர்கள் குற்றச்சாட்டும் பின்னணியும்!

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நக்சல்(மாவோயிஸ்ட்) ஒழிப்பில் தீவிரம்காட்டி வருகிறது மத்திய அரசு. அந்தவகையில், பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை, மாவட்ட ரிசர்வ் கார்டு இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 29 நக்சலைட்டுகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

நக்சல் தேடுதல் வேட்டையில்

`நக்சல்கள் இல்லாத இந்தியா’

பா.ஜ.கவின் கடந்த பத்தாண்டுகளில் 70% சதவிகிதமாக இருந்த நக்சல்களின் தீவிரவாதம் 52%-மாக குறைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. மேலும்`, எதிர்காலத்தில் நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கம் முதல் நக்சல்களின் செல்வாக்கு நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படை(BSF), மாவட்ட ரிசர்வ் காவல்படை (DRG) மற்றும் கமாண்டோ பட்டாலியன் (COBRA) உள்ளிட்ட ஆயுதப்படையினர் இணைந்து நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் சத்தீஸ்கரின் கான்கெர் வனப்பகுதியில் திரிந்த 3 பேர் நக்சல்கள் எனும் சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், உயிரிழந்த மூவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர், “பழங்குடிகளான நாங்கள் காட்டை நம்பியே வாழ்கிறோம். மரப்பட்டைகள், இலைகள், பிற விளைபொருட்களுக்காக காட்டுக்கு செல்கிறோம். அந்தவகையில், இலை சேகரிப்பு சீசன் தொடங்கியிருப்பதால் அவர்கள் மூவரும் மரங்களின் பட்டைகள், தண்டுகள் உள்ளிட்டப் பொருட்களைக் கொண்டு கயிறுகளை தயாரிப்பதற்காக காட்டுக்குச் சென்றனர். ஆனால், அரசுக்கு கணக்கு காட்டுவதற்காக அப்பாவிகள் மூவரையும் நக்சலைட்டுகள் என்றுகூறி காவல்துறையினர் `போலி என்கவுன்டர்’ செய்துவிட்டனர் என குற்றம்சாட்டினர்.

`நக்சல்களா? பழங்குடி கிராம மக்களா?’

அதைத்தொடர்ந்து, மார்ச் மாத இறுதியிலும் பிஜப்பூர் மாவட்ட சிபுர்பட்டி வனப்பகுதியில் நக்சலைட்டுகள் எனும் சந்தேகத்தின் பெயரில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அறிக்கை வெளியிட்ட நக்சல் இயக்க செயலாளர், “உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் மட்டுமே எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற நால்வரும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள். மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்பதற்காக கிராமத்துக்குச் சென்ற எங்கள் அமைப்பினர் இருவரையும், நிராயுதபாணியாக இருந்த பொதுமக்களில் நால்வரையும் அழைத்துச் சென்று விசாரித்த பாதுகாப்பு படையினர், பின்னர் அவர்களை ஓடவிட்டு கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இது அப்பட்டமான போலி என்கவுன்டர், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரால் ஜோடிக்கப்பட்டவை!” எனக் குற்றம்சாட்டினார். இதற்கு பாதுகாப்பு படை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த நிலையில், நக்சல்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்து ஏப்ரல் 3-ம் தேதி சுக்மா மற்றும் பிஜப்பூரில் ஓர் நாள் பந்துக்கு நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்தனர்.

நக்சல் தடுப்பு வேட்டை – போலி என்கவுண்டரா?

`வேட்டையாடப்பட்ட நக்சலைட்டுகள்’

அதையடுத்து, நக்சல்கள் வேட்டையை இன்னும் தீவிரப்படுத்திய அரசாங்கம் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தது. நக்சல்கள் பந்த் அறிவித்த அதே நாளில், சத்தீஸ்கரின் பிஜப்பூரில் 13 நக்சலைட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கடுத்து, ஏப்ரல் 6-ம் தேதி கான்கெரில் மேலும் 3 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், ஏப்ரல் 16-ம் தேதி கான்கெர் மாவட்டம் ஹபடோலா வனப்பகுதியில், எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பெண்கள் உள்பட மொத்தம் 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில், அரசால் தலைக்கு ரூ.25 லட்சம் விலைவைக்கப்பட்ட நக்சலைட்டுகளின் முக்கியத் தலைவரான சங்கர் ராவும் கொல்லப்பட்டிருக்கிறார். அவர்களிடமிருந்து ஐந்து ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் LMG ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இறந்தவர்களில் 18 உடல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும், நக்சல்களுடனான இந்த சண்டையில் மூன்று பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

`நக்சலிசம் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’:

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 79 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட இந்த தாக்குதல் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த தாக்குதல் நடவடிக்கை குறித்துப் பேசிய சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க முதல்வர் விஷ்ணு தேவ் சாய்,“கான்கெர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டர் ஒரு வரலாற்று வெற்றி” என்று கூறியிருக்கிறார். அதேபோல துணை முதல்வர் விஜய் சர்மா, “எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் நக்சல் இல்லாத சத்தீஸ்கரை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்! இது நக்சலிசத்தின் மீது சத்தீஸ்கர் காவல்துறை நடத்திய `சர்ஜிக்கல் ஸ்டிரைக்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

அமித் ஷா

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நக்சலிசத்திலிருந்து நாட்டை விடுவிப்பதில் மோடி அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது. மேலும், சத்தீஸ்கரின் கான்கெரில் பாதுகாப்புப் படைகள் அடைந்த இந்த மாபெரும் வெற்றி நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

பூபேஷ் பாகல்

`எல்லாமே போலி என்கவுண்டர்’:

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓர் பரபரப்பு தகவலை தெரிவித்திருக்கிறார். அதாவது, “பா.ஜ.க ஆட்சியில் `போலி என்கவுண்டர்கள்’ சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, கடந்த நான்கு மாதங்களில் போலி என்கவுன்ட்டர்கள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்திருக்கின்றன. பா.ஜ.க அரசு பல அப்பாவி பழங்குடி கிராம மக்களை `நக்சல்கள்’ என்று முத்திரை குத்தி போலியாக என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் `பொய் வழக்கு’ போட்டு கைது செய்து விடுவோம் என்றும் பழங்குடி மக்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர். கான்கெர் மட்டுமல்லாமல் கவர்தா மாவட்டத்திலும், இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் கேள்விப்பட்டு வருறோம்!” என பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.