ஐபிஎல் 2024 தொடரில் 35வது போட்டியில் சன்ரைசர்ஸ் அணி புதிய வரலாற்றை படைத்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் இருந்து அதிரடி காட்டிய அந்த அணி 5 ஓவரில் 100 ரன்களை கடந்து, ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் 100 ரன்களை கடந்த அணி என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறது. அத்துடன் அந்த அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் அரைசதம் விளாசி மற்றொரு சாதனை படைத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவும் அதிரடி காட்ட ரன்ரேட் 20 ரன்களுக்கும் குறையாமல் சென்றது. டெல்லி கேப்டன் ரிஷப் பந்துக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. முதல் ஆறு ஓவர்களில் மட்டும் 12 மெகா சிக்சர்களை விளாசியது சன்ரைசர்ஸ் அணி.
April 20, 2024
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா போட்டி போட்டுக் கொண்டு தலா 6 சிக்சர்களை விளாசினர். டிராவிஸ் ஹெட் 12 பவுண்டரிகளை விளாச, அபிஷேக் 2 பவுண்டரிகளை விளாசினார். முகேஷ் குமார் ஒரே ஓவரில் டிராவிஸ் ஹெட் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை விளாசினார். பவர் பிளே முடிவில் ஆறு ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 125 ரன்கள் விளாசியது. இதில் விக்கெட் ஏதும் விழவில்லை. முதல் ஓவரில் 19 ரன்கள், இரண்டாவது ஓவரில் 21 ரன்கள், மூன்றாவது ஓவரில் 22 ரன்கள், நான்காவது ஓவரில் 21 ரன்கள், ஐந்தாவது ஓவரில் 20 ரன்கள், ஆறாவது ஓவரில் 22 ரன்கள் என வரிசையாக டெல்லி பவுலர்களை வெளுத்துக் கட்டியது சன்ரைசர்ஸ் அணி.
April 20, 2024
அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் பந்துவீச்சில் அவுட்டானார். ஒருவேளை அவர் அரைசதம் அடித்திருந்தால் ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த பிளேயர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியிருப்பார். ஆனால் குல்தீப் அந்த சாதனையை தடுத்து நிறுத்தியதுடன் டெல்லி அணிக்கு ஒரு மூச்சுவிட வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அத்தோடு நிக்காமல் எய்டன் மார்கிரம் விக்கெட்டையும் அதே ஓவரில் வீழ்த்தினார். ஒரு ரன்னுக்கு மார்கிரம் அவுட்டானார்.
April 20, 2024
அடுத்து வந்த ஹென்றி கிளாசனும் அதிரடி காட்டி டெல்லி அணியை மிரட்டிக் கொண்டிருந்த நிலையில் மற்றொருபுறம் டிராவிஸ் ஹெட் விக்கெட்டடையும் வீழ்த்தினார் குல்தீப். 32 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார் ஹெட். அடுத்த ஓவரை வீச வந்த அக்சர் படேல் துல்லியமாக பந்துவீச ஹென்றி கிளாசன் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் படுவேகமாக உயர்ந்து கொண்டிருந்த சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோருக்கு முட்டுக்கட்டையும் போட்டார். இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மீண்டும் கம்பேக் கொடுத்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டுகளும், அக்சர் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.