கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த கவுதம் கம்பீர், இப்போது அந்த அணியின் ஆலோசகராக இருக்கிறார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கடந்த ஐபிஎல் தொடர்களில் செயல்பட்டு வந்த அவர் இம்முறை மீண்டும் கொல்கத்தா அணியுடன் இணைந்துள்ளார். அவரது ஆலோசனையின் கீழ் கொல்கத்தா அணி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. 6 போட்டிகளில் விளையாடி இருக்கும் கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தடுமாற்றத்தில் இருந்த கொல்கத்தா, இப்போது தங்களின் டிரேட் மார்க் விளையாட்டுக்கு திரும்பியுள்ளது.
அதற்கு மிக முக்கிய காரணம் கவுதம் காம்பீரின் என்டிரியே ஆகும். அவர் அணியின் ஆலோசகராக பொறுப்பேற்றதும் ஒட்டுமொத்த கொல்கத்தா அணியில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதாவது, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சுனில் நரைன் இறகப்பட்டார். அவர் ஏற்கனவே கேகேஆர் அணிக்கு ஓப்பனிங் இறங்கியிருந்தாலும் திடீரென அந்த இடத்துக்கு வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட பலர் ஆட வைக்கப்பட்டனர். இருப்பினும் நிலையான ஓப்பனிங் ஜோடி கேகேஆர் அணிக்கு கிடைக்கவில்லை. ஒரு சீசனில் 7 புதிய ஜோடிகளை எல்லாம் கொல்கத்தா அணி பரிசோதித்து பார்த்திருக்கிறது. அந்தளவுக்கு கொல்கத்தா அணியின் ஓப்பனிங் ஜோடி மாற்றத்தை செய்யப்பட்ட நிலையில், முதலில் அந்த குறையை போக்கியிருக்கிறார்.
இது குறித்து கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் பேசும்போது, ” மற்றவர்கள் சொல்வதைப் போல் செயல்களை சிறப்பாக செய்தால் முடிவுகள் சரியாக கிடைக்கும் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. எல்லோரும் சரியான விஷயங்களை செய்கிறார்கள், முடிவுகள் சரியில்லாதபோது அவர்களின் ஆட்டமும் தவறானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் முடிவுகள் சரியாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் இலக்கு. கொல்கத்தா மக்கள் நாங்கள் வெற்றி பெறுவதை பார்க்கவே மைதானத்துக்கு வருகிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் விளையாட வேண்டும். இதனை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.” என கூறியிருக்கிறார்.
கொல்கத்தா அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்க உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி ஏப்ரல் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கிறது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.