லக்னோ,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய லக்னோ 19 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 180 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி 3வது தோல்வியை சந்தித்துள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை தரப்பில் கடைசி கட்டத்தில் களம் இறங்கிய தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் தோனியின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தோனியின் பேட்டிங் வரிசை மாற்றம் குறித்து பேசிய சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது, கடந்த சீசனின் போது தோனியின் கால்களில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தில் இருந்து தோனி இதுவரை முழுமையாக மீண்டு வரவில்லை. இதன் காரணமாகவே தோனி குறைந்த அளவிலான பந்துகளையே எதிர்கொள்கிறார். ரசிகர்களை போல் நாங்களும் தோனி அதிக நேரம் களத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
ஆனால் தோனி களமிறங்கும் நேரம் சரியானது தான். இந்த சீசனில் நிச்சயம் தோனி சி.எஸ்.கே அணிக்கு அவசியமான தேவையாக இருக்கிறார். கடைசி நேரத்தில் வந்து 2 முதல் 3 ஓவர்களை விளையாட வேண்டிய ரோலில் இருக்கிறார். அந்த இடத்தில் விளையாடுவதற்கு தோனியை விடவும் சிறந்த வீரர் யாரும் கிடையாது.
தோனியை மேல் வரிசையில் களமிறக்குவதற்கு பதிலாக, மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பை எடுத்து விளையாட வேண்டும். மற்ற வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து பினிஷிங் பொறுப்பை தோனியிடம் கொடுக்கலாம். அங்கிருந்து தோனியால் நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த சீசனில் களமிறங்கும் ஒவ்வொரு முறையும் தோனி சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
தோனி களமிறங்கும் போது மைதானத்தின் சூழலே வேறு மாதிரி மாறிவிடுகிறது. நிச்சயம் தோனியின் சாதனையை நினைத்து அனைவரும் பெருமை கொள்கிறோம். அவருக்கு கிடைக்கும் அன்புக்கு உரியவராக தோனியும் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.