2021 ஐபிஎல்லில் பும்ரா வீசிய யார்க்கரில் ஸ்வீப் ஷாட் ஆடி கெய்க்வாட் உண்டாக்கிய அதே பிரமிப்பை இந்தாண்டு ஏற்படுத்தியுள்ளார் அஷுதோஷ் ஷர்மா. அதே பும்ரா, அதே யார்க்கர், அதே ஸ்வீப்பில் சிக்ஸர்!
மூன்றாவது வெற்றிக்கு மிக அருகில் முகாமிட்டிருந்த மும்பை தரப்பிற்கு மரண பயத்தின் அத்தனை வாயில்களையும் அகலத் திறந்து காட்டிக் கொண்டிருந்தது ஓர் அதிர்ச்சிப் பேரலை. சாம் கரண், ரிலே ரோஸோ, லிவிங்ஸ்டன் என கோடிகளைக் கொடுத்து பஞ்சாப்பால் வாங்கப்பட்ட வீரர்களால் உண்டாக்க முடியாத தாக்கத்தை 20 லட்சங்கள் மட்டுமே கொடுத்து வாங்கப்பட்ட ஓர் இந்திய வீரர் கம்பீரமாக அங்கே நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவர் களமிறங்கிய சந்தர்ப்பத்தில் இலக்கை எட்டுவதற்கான ரன்ரேட் 10-ஐ தாண்டி பயமுறுத்திக் கொண்டேதான் இருந்தது. இருப்பினும் சோர்வு என்பதையும் அவரது பேட் அறியவில்லை, சரணாகதி தத்துவத்திலும் அதற்கு நம்பிக்கை இல்லை.
ஷெப்பர்டின் பேக் ஆஃப் லெந்த் டெலிவரிக்குக் கிடைத்த அதே சிக்ஸர் தண்டனைதான் ஹர்திக் பாண்டியாவின் ஸ்லோ பாலுக்கும். ஆகாஷ் மத்வாலின் யார்க்கருக்கு நேர்ந்த ரிவர்ஸ் ஸ்கூப், எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக பும்ராவின் பந்தில் அடித்த ஸ்வீப் ஷாட் என மும்பையின் பௌலிங் யூனிட்டை மலைக்க வைத்தார் அஷுதோஷ் ஷர்மா. பஞ்சாப்பின் பதற்றம் நீர்த்துப் போக மும்பையுடையதோ காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது. 23 பந்துகளில் அடிக்கப்பட்ட ஓர் அரைசதம் சப்த நாடிகளையும் ஒடுக்கியது. இவை அத்தனையையும் நிகழ்த்திக் கொண்டிருந்தது ஆண்டுக்கணக்கான ஐபிஎல் அனுபவமுடைய ஒரு வீரர் அல்ல, பஞ்சாப்புக்காக இதை அவர் செய்வது முதல்முறையும் அல்ல.
நடப்புத் தொடரில் பல சந்தர்ப்பங்களில் பஞ்சாப் நிராயுதபாணியாகத் தத்தளித்த பொழுதுகளில்தான் அஷுதோஷின் அக்னிப் பிரவேசம் நடந்துள்ளது. குஜராத்துக்கு எதிரான போட்டியில் தேவைப்படும் ரன்ரேட் 11-ஐ தாண்டிய கட்டத்தில், சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் அது 15-ஐ கடந்து போது, மும்பைக்கு எதிரான போட்டியில் 11-ஐ நெருங்கி போது என சிக்கலான தருணங்களில்தான் அவர் களமிறங்க வேண்டியிருந்தது. முடிவு, குஜராத்துக்கு எதிரான போட்டியை வெல்ல வைத்தார் என்றால் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பைக்கு எதிரான போட்டிகள் இரண்டிலுமே முறையே 2 மற்றும் 9 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வி என கிட்டத்தட்ட அணியை இலக்கை நோக்கி இழுத்துச் சென்றுவிட்டார். ராஜஸ்தானுக்கு எதிரான அவரது கேமியோவும் சற்றும் சளைத்ததல்ல.
இம்பேக்ட் பிளேயராக இறங்கிக் கொண்டிருந்தவரை பிளேயிங் லெவனில் நிரந்தரமாக்கி பஞ்சாப் பதவி உயர்வு தரும் அளவிலான திறன் அவருக்கு எங்கிருந்து வந்தது?
வாழ்க்கை எப்போதுமே பச்சை விளக்குளாலும் கலங்கரை விளக்கங்களாலும் மட்டுமே சூழப்பட்டிருக்காது, படுகுழியினையும் எரிதழலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அஷுதோஷுக்கோ வழிகாட்டி மரங்கள்கூட குழப்ப ரேகையோடே கட்டமைக்கப்பட்டிருந்தன. டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் மத்தியப்பிரதேச அணியின் லைவ் வயர் ஆக வலம் வந்த அவரை அவர்கள் விலக்கி வைத்து, ஒருவேளை உணவுக்காக அம்பயரிங் பணிகளில் எல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது, நாள்கள் இப்படியே நகரந்துவிடுமோ என்ற விரக்தியில் மன அழுத்தத்திற்கு உள்ளானது என இருள் சூழ்ந்த நாள்களை அவர் கடந்தது நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான்.
2022-ல் மும்பை உள்ளிட்ட கிட்டத்தட்ட ஏழு ஐபிஎல் அணிகள் அவரை டிரையலுக்கு அழைத்தன. காரணம் கண்மூடித்தனமாக பேட்டை சுற்றாமல் ஷாட் செலக்சன், டைமிங் ஆகிய கூறுகளைக் கையாள்வதில் அவருக்கு உள்ள வல்லமைக்காகவும் அதன் வாயிலாக இலகுவாக பந்தை பவுண்டரிக்குத் துரத்தும் அவரது ஆளுமைக்காகவும்தான். இருப்பினும் 2022 ஏலத்தின் போது அவரை வாங்க அணிகள் யோசித்தன. காரணம் அவரது திறன் குறித்து கேள்வி ஞானமாகவே கேட்டறிந்தது தானே ஒழிய டொமெஸ்டிக் அனுபவம் என்பது அவருக்கு மொத்தமாகவே இல்லாமல் போயிருந்தது. மேலும் தாமதிக்காமல் ரயில்வே அணியில் அவர் இணைந்த பிறகு அவரது ஆட்டம் அத்தனை பேரின் கவனத்தையும் கவர்ந்துவிட்டது.
டொமெஸ்டிக் கரியர் கிராஃப் அங்கேதான் உயரத்தில் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கியது. இரட்டை சதத்தை எல்லாம் ஒரு டி20 பார்த்தது, எப்போதும் ரன்களை அசாத்திய ஸ்ட்ரைக்ரேட்டில் குவிப்பதில் அவருக்கான தீராப் பசி அவரை வெள்ளைப் பந்துலகில் தூக்கிப் பிடித்தது என்றால் சஞ்சய் பங்கர் கூறியதைப் போல் முறையான கிரிக்கெட் ஷாட் அவரை ரெட்பால் கிரிக்கெட்டிலும் கோலோச்ச வைத்தது. அறிமுக ரஞ்சி போட்டியிலேயே 84 பந்துகளில் 123 ரன்களைக் குவிக்க வைத்தது அதுவும் 145/6 என அணி தத்தளிக்கும் போது எட்டாவது இடத்தில் களமிறங்கி அணியை வெல்லவும் வைத்தது. இவை எல்லாம் சேர்ந்துதான் பஞ்சாப்பில் அவருக்கான வாய்ப்பை உண்டாக்கின. அதே ரிதத்தோடு பேட்டும் பயணிக்க, முறையே வெறும் 20 – 20 லட்சங்களுக்கு வாங்கப்பட்ட அவரும் ஷசாங்க் சிங்கும்தான் பல போட்டிகளில் 50 – 50 சதவிகித வெற்றி வாய்ப்பை உண்டாக்கி வருகின்றனர்.
ஓப்பனராகத்தான் அவரது தொடக்க நாள்கள் இருந்தன. பின்பு எந்த இடத்திலும் இறங்கி ஆட அவர் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டார். அதுதான் ஓப்பனராக இல்லாத ஒருவர் ஆடிய முதல் மூன்று ஐபிஎல் போட்டிகளிலுமே 30+ ரன்களை எடுத்தது இதுவே முதல்முறை என்ற சாதனையையும் நிகழ்த்த வைத்திருக்கிறது. ஆடிய முதல் நான்கு ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலில் அவரை இரண்டாவது இடத்தில் 13 சிக்ஸர்களோடு அமர்த்தியிருக்கிறது (முதலிடம் மெக்கல்லமிற்கு). அவரது பேட்டின் ப்ளோ, டைமிங், அவரது பவர், ஃபினிஷிங் திறன், அதையும் நிலைப்புத்தன்மையோடு செய்வது என ஒவ்வொன்றும் அதனைச் சாத்தியமாக்கி வருவதோடு ஒளிமயமான எதிர்காலத்திற்கான உத்தரவாதத்தையும் தருகின்றன.
மீடியம் பேஸ் பௌலராகவும் அவரது ஒருசில எக்கானமிக்கல் ஸ்பெல்களை ரெட் பால் உலகம் கண்டு உள்ளது. அதை லிமிடெட் ஃபார்மேட்டிலும் முயன்று கொஞ்சம் தன்னைக் கூர்ப்படுத்திக் கொண்டார் என்றால் போட்டிகளை அல்ல தொடர்களையும் கோப்பைகளையும் வென்று தரும் வல்லமை அவரிடத்தில் உண்டு!