சிறந்த நாடாளுமன்றவாதி, அரசியல் கட்சித் தலைவர், மனித உரிமைப் போராளி, தொழிற்சங்கவாதி, பத்திரிகையாளர், சோசலிச சிந்தனையாளர் என்று பல முகங்களைக் கொண்டவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். கர்நாடகா மாநிலம் மங்களூருவில் 1930-ம் ஆண்டு பிறந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், 1946-ம் ஆண்டு தன் பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க பெங்களூருவுக்குச் சென்று கிறிஸ்தவ வேதக் கல்வி பயின்று மதகுருவாக மாறினார்.
அரசியல் ஆர்வமும், புரட்சிகர சிந்தனைகளையும் கொண்டிருந்த அவரால், மதகுருவாக தொடர்ந்து செயல்பட முடியவில்லை. ஆகவே, மதகுருமார் பணியிலிருந்து விடுபட்டு, அவர் மும்பைக்குச் சென்றார். அங்கு, சோசலிச தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்து செல்வாக்கு மிகுந்த தொழிற்சங்கத் தலைவராக பரிணமித்தார்.
மும்பையில் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது, அவர்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பது, தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துவது என்ற பணிகளில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் முழுமூச்சாக செயல்பட்டார். அந்த வகையில், 1950, 1960 காலக்கட்டத்தில், மும்பையில் மிகப்பெரிய போராட்டங்களையும், வேலைநிறுத்தங்களையும் தனது தலைமையில் அவர் நடத்தினார். ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைககளை முன்வைத்து பெரும் போராட்டங்களை ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் நடத்தினார். அவரது தலைமையில்1974-ம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே வேலைநிறுத்தப் போராட்டத்தால், இந்தியா முழுவதும் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தொழிற்சங்கத்தோடு தனது பணிகளைச் சுருக்கிக்கொள்ளளாமல், நேரடி அரசியலில் குதித்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், 1967-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பம்பாய் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எஸ்.கே.பாட்டீலை ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தோற்கடித்தார். அந்த வெற்றியால் அவரது செல்வாக்கு மேலும் உயர்ந்தது.
1975-ம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசர நிலையைப் பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அவசரநிலையைப் பிரகடனத்தை கடுமையாக விமர்சித்தார். அதே நேரத்தில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அவர் தலைமறைவாக இருந்தார்.
அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோது, ஒடிஷாவில் இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், காவல்துறையிடம் சிக்காமல் தப்பிக்க மாறுவேடத்தில் சுற்றித்திரிந்தார். அப்போது, எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெற்ற குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் அவர் அதிகம் பயணித்தார். ஆனாலும், ஒரு கட்டத்தில் போலீஸிடம் அவர் சிக்கினார். 1976-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி கொல்கத்தாவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது செய்யப்பட்டார். பரோடா டைனமைட் வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கைகளிலும், கால்களிலும் போலீஸார் விலங்கு மாட்டினர். விலங்கிடப்பட்ட நிலையிலேயே, நீதிமன்றத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டார். அப்போது, சர்வாதிகார ஆட்சி ஒழிக என்று அவர் முழங்கினார்.
அவசரநிலை விலக்கிக்கொள்ளப்பட்டு, மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸுக்கு எதிராக பல எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஜனதா தளத்தை உருவாக்கின. ஜனதா தளத்தில் முக்கியத் தலைவராக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் விளங்கினார். மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, சிறையில் இருந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், சிறையில் இருந்தபடியே பீகார் மாநிலம் முசாபர்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அதில், 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைந்தது. அதில், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மத்திய தொழில்துறை அமைச்சராக ஆனார். அப்போது, சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
1989 முதல் 1990 வரை ரயில்வே அமைச்சராக அவர் இருந்தபோது, கொங்கன் ரயில்வே திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். சோசலிச கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ், வலதுசாரிகளுடன் கைகோத்தது பெரும் முரண்பாடாகப் பார்க்கப்பட்டது. 1998, 2004 என இரண்டு முறை அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றபோது, பாதுகாப்புத்துறை அமைச்சராக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இருந்தார்.
அவர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் (1998-2004) கார்கில் போர் நடைபெற்றது. பொக்ரானில் அணுகுண்டு சோதனைகளும் அப்போதுதான் நடத்தப்பட்டன. வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் காஷ்மீர் விவகாரங்களுக்கான அமைச்சராகவும் அவர் பணியாற்றினார். அப்போது, காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒன்பது முறை மக்களவை எம்.பி-யாக அவர் இருந்திருக்கிறார். 1967-ம் ஆண்டு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அவர், 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 என மொத்தம் ஒன்பது முறை மக்களவை எம்.பி-யாக அவர் தேர்வுசெய்யப்பட்டார். 2009-ம் ஆண்டு பீகாரிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தகவல் தொடர்புத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர், ரயில்வே அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் என பல முக்கிய துறைகளின் அமைச்சராக செயல்பட்ட அவர், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் முடங்கினார். 2019-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி 88-வது வயதில் அவர் காலமானார்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக தேசிய அரசியலில் முக்கிய முகங்களில் ஒன்றாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு எதிராக பல சர்ச்சைகளும் உண்டு. இந்திரா காந்தி அரசின் அவசர நிலை பிரகடனத்தின்போது, அரசுக்கு எதிராக கலவரம் ஏற்படுத்த அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.-விடமிருந்து ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பணம் கேட்டார் என்று விக்கிலீக்ஸ் மூலம் வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அன்னிய முதலீட்டுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானவர் என்று கருதப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ், அவசர நிலை பிரகடனத்துக்கு எதிராக நாட்டில் கலவரம் ஏற்படுத்த சி.ஐ.ஏ.-விடமிருந்து பணம் கோரினார் என்றும், அமெரிக்காவிடமிருந்து பணம் பெறுவதற்கு அவர் தயாராக இருந்தார் என்றும் இந்தியாவுக்கான அன்றைய அமெரிக்க தூதரக அதிகாரி, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை அவருடைய ஆதரவாளர்கள் மறுத்தனர். ‘ஃபெர்னாண்டஸின் நற்பெயருக்கு களம் ஏற்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட சில சக்திகள் முயற்சி செய்கின்றன என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடன் சேர்ந்து வாழ்ந்த சமதா கட்சியின் தலைவரான ஜெயா ஜெட்லி வாயிலாகவும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பிரச்னையில் சிக்கினார். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இறந்த பிறகு அவருக்கு அஞ்சலி தெரிவித்த பலரும், ஜெயா ஜெட்லிக்கு ஆறுதல் தெரிவிக்க மறக்கவில்லை. இவர்கள் கணவன் – மனைவி இல்லை என்றாலும், அவர்கள் ஒரே வீட்டில் வசித்தனர். ‘ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடனான உறவு நட்பு ரீதியானது’ என்று பல நேரத்தில் ஜெயா ஜெட்லி தெரிவித்திருக்கிறார்.
1980-கள் காலக்கட்டத்தில், அரசியலில் ஒன்றாகப் பணியாற்றிய வேளையில் தொடங்கிய இவர்களின் நட்பு, காலப்போக்கில் மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது, தன் கணவர் அசோக் ஜெட்லியிடமிருந்து ஜெயா ஜெட்லி பிரிந்திருந்தார். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தன் மனைவி லைலா கபீரிடமிருந்து பிரிந்திருந்தார். அந்தச் சூழலில, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸும் ஜெயா ஜெட்லியும் ஒன்றாக வசிக்க ஆரம்பித்தனர். அது அவர்களின் தனிப்பட்ட விஷயம்.
ஆனால், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, வெளிநாட்டிலிருந்து ஆயுதம் வாங்கியதில் ஜெயா ஜெட்லி கமிஷன் பெற்றார் என்ற விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்புத் துறைக்கு ஆயுதங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளை 2000-ம் ஆண்டு டெஹல்கா இணையதளம் அம்பலப்படுத்தியது. அந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகளை வாங்கியதில் ரூ. 2 கோடிக்கு கமிஷன் பெறப்பட்டதாக சி.பி.ஐ குற்றம் சாட்டியது. அந்த வழக்கில், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ஜெயா ஜெட்லி, முன்னாள் கடற்படை தளபதி சுஷில் குமார், சமதா கட்சியின் முன்னாள் நிர்வாகி ஆர்.கே.ஜெயின் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ரூ. 1,150 கோடிக்கு மொத்தம் 200 ஏவுகணைகள் வாங்கப்பட்டன. அவற்றை வாங்குவதற்காக நடந்த பேரத்தில் ஜெயா ஜெட்லி தரகராக செயல்பட்டு ரூ. 2 கோடியை லஞ்சமாக பெற்று ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்குக் கொடுத்தார் என்று சி.பி.ஐ குற்றம் சாட்டியது. அந்த வழக்கில், 2020-ம் ஆண்டு ஜெயா ஜெட்லி உள்ளிட்டோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
இப்படியாக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் குறித்து சில சர்ச்சைகளும், விமர்சனங்களும் இருந்தபோதிலும், ஒரு காலத்தில் தொழிலாளி வர்க்கத்துக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பணிகளும் இன்றுவரை பேசப்படுகின்றன.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY