ஒருவர் எந்த அளவுக்கு அதிக தொகுப்பு நிதியை (Corpus) பணி ஓய்வுக் காலத்துக்காக (Retirement) சேர்க்கிறாரோ, அந்த அளவுக்கு அவரின் கடைசிக் காலம் களிப்பாக இருக்கும்.
பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்..!
ஓய்வுக் காலத்துக்கு தேவையான தொகையை சேர்ப்பதில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (Equity Mutual Fund) திட்டங்கள் மிகவும் ஏற்றதாக உள்ளன. இவை ஓய்வூதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விட நீண்ட காலத்தில் இரு மடங்கு வருமானத்தை அளித்து வருகின்றன.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பல வகைகள் உள்ளன. இவற்றில் ஒருவருக்கு தேவையான மற்றும் பொருத்தமான ஃபண்ட் திட்டங்களை, முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம், வருமான எதிர்பார்ப்பு ஆகியவற்றை பொறுத்து அமையும்.
முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக லார்ஜ் கேப் ஃபண்ட்கள் உள்ளன. இந்த ஃபண்ட்களில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், பங்குச் சந்தை மதிப்பின் அடிப்படையில் முதல் 100 இடங்களில் உள்ள நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்ட்களில் டாப் 5 ஃபண்ட்கள், 2024 ஏப்ரல் 14 நிலவரப்படி கடந்த ஐந்து மற்றும் 10 ஆண்டுகளில் முறையே சராசரியாக 18-24% மற்றும் 17-21.5% வருமானம் கொடுத்துள்ளன.
குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் இருந்தால் லார்ஜ் கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் மூன்றாண்டுகளுக்குள் மேல் ஐந்தாண்டுகளுக்குள் இருந்தால், முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம் நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும் ஹைபிரீட் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். குறிப்பாக, பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்கள், கன்சர்வேடிவ் ஹைபிரீட் ஃபண்ட் பிரிவுகளில் முதலீடு செய்யலாம்.
முதலீட்டுக் காலம் மூன்றாண்டுகளுக்கு குறைவாக இருந்தால் கட்டாயம் கடன் மியூச்சுவல் ஃபண்ட்களில்தான் முதலீடு செய்ய வேண்டும். காரணம், இந்தக் குறுகிய காலகட்டத்தில் ஈக்விட்டி ஃபண்ட்கள் நெகடிவ் வருமானம் கூட கொடுக்க வாய்ப்புள்ளது.
மல்டி கேப் ஃபண்ட்..!
அடுத்து முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் பத்து ஆண்டுகளுக்குள் இருந்தால், முதலீட்டாளர் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தால், முதலீட்டாளரிடமிருந்து திரட்டப்படும் பணம், பல்வேறு சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் மல்டி கேப் ஃபண்ட், ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்களில் கலந்து முதலீடு செய்யலாம்.
மல்டி கேப் ஃபண்ட் பிரிவில் டாப் 5 ஃபண்ட்கள் கடந்த ஐந்து மற்றும் 10 ஆண்டுகளில் முறையே சராசரியாக 19-30% மற்றும் 16-24% வருமானம் கொடுத்துள்ளன. ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட் பிரிவில் டாப் 5 ஃபண்ட்கள் கடந்த ஐந்து மற்றும் 10 ஆண்டுகளில் முறையே சராசரியாக 20-30% மற்றும் 18-24% வருமானம் கொடுத்துள்ளன.
முதலீட்டுக் காலம் பத்தாண்டுகளுக்கு மேல் 15 ஆண்டுகளுக்குள் இருந்தால் லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட் மற்றும் மிட் கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம்.
லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட் பிரிவில் டாப் 5 ஃபண்ட்கள் கடந்த ஐந்து மற்றும் 10 ஆண்டுகளில் முறையே சராசரியாக 20-27% மற்றும் 19.5-23.5% வருமானம் கொடுத்துள்ளன. மிட் கேப் ஃபண்ட் பிரிவில் டாப் 5 ஃபண்ட்கள் கடந்த ஐந்து மற்றும் 10 ஆண்டுகளில் முறையே சராசரியாக 25-32.5% மற்றும் 22-24% வருமானம் கொடுத்துள்ளன.
ஸ்மால் கேப் ஃபண்ட்..!
இதுவே முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் நிலையில்தான் ஸ்மால் கேப் ஃபண்ட்களில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். அதுவும் முதலீட்டில் அதிக ரிஸ்க் கூடிவர்கள்தான் இந்தப் பிரிவு ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும். ஸ்மால் கேப் ஃபண்ட் பிரிவில் டாப் 5 ஃபண்ட்கள் கடந்த ஐந்து மற்றும் 10 ஆண்டுகளில் முறையே சராசரியாக 28-38% மற்றும் 24-28% வருமானம் கொடுத்துள்ளன.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பொறுத்த வரையில் சந்தை அபாயம் இருக்கிறது…மற்றும் கடந்த கால வருமானம் எதிர் காலத்தில் நிச்சயமில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
அடுத்த வாரம், ‘ஓய்வுக் கால மியூச்சுவல் ஃபண்ட்; குரோத், டிவிடெண்ட் ஆப்ஷன் எது பெஸ்ட்?’ என்பது பற்றி பார்ப்போம்