மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 2021-ல்,சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் கைதாகினர்.
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டார். இந்நிலையில், ஆர்யன் கானை விடுவிக்க சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2023 மேமாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே போதைப் பொருள் தடுப்பு பிரிவு சமீர் வான்கடே மீதான புகாரை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி ஞானஸ்வர் சிங் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை அமைத்தது. தற்போது திடீரென்று ஞானஸ்வர் சிங்குக்குப் பதிலாக, மத்திய நிதித் துறை துணை பொது இயக்குநர் நீரஜ்குமார் குப்தா தலைமை லஞ்சஒழிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 மாதங்களுக்கு பொறுப்பில் தொடர்வார் என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
பதவி ஏற்பாரா?- ஞானஸ்வர் சிங்கின்3 ஆண்டு கால பொறுப்பு நிறைவடைந்துள்ள நிலையில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் ஞானஸ்வர் இந்தப் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “சமீர் வான்கடே மீதான லஞ்ச வழக்கில் தன்னை தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானஸ்வர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொது இயக்குநர் பிரதானுக்கு கடிதம் அனுப்பினார். தனக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது என்றும் தன் மீது சிலர் புகார் அளித்துள்ளதால் இனியும் இந்தப் பொறுப்பில் தொடர்வது முறையாக இருக்காது என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்” என்று தகவல் அறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில் ஞானஸ்வருக்குப் பதிலாக, வழக்குவிசாரணையில் நீரஜ் குமார்குப்தா தலைமை லஞ்ச ஒழிப்புஅதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆதாரம் இல்லை என்று விசாரணைக் குழு அறிக்கை அளித்ததையடுத்து வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.