மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 1,200 கன அடியாக இன்று(ஏப். 21) முதல் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் சரிந்து காணப்படுவதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது.
எனவே, காவரி கரையோர மாவட்டங்கள், குடிநீர் நீரேற்று நிலையம் மூலம் இதர மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் விநாடிக்கு 1,000 கன அடியில் இருந்து 2,000 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
கடந்த ஏப்ரல் 11-ம் தேதி காலை 6 மணி முதல் குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, அணையில் இருந்து 1,500 கன அடி நீர் திறப்பாலும், அணைக்கு நீர்வரத்து தொடர் சரிவால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
எனவே, கோடை காலத்தில் கூடுதலாக தண்ணீர் தேவைப்படும் நிலை உள்ளது. எனவே, மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு, இன்று காலை 6 மணி முதல் 1,200 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் நேற்று 55.20 அடியாக இருந்த நிலையில் இன்று 55 அடியாகவும், நீர் இருப்பு 21.24 டிஎம்சியில் இருந்து 21.10 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது. அணைக்கு நேற்று விநாடிக்கு நீர்வரத்து 22 கன அடியாக இருந்த நிலையில், இன்று 79 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவை விட, அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக சரியத் தொடங்கியுள்ளது.