காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “பொது போக்குவரத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், ரயில்வே துறையைச் சீரழிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும்” என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் வரை சென்ற ரயிலின் இரண்டாம் ரக AC பெட்டியில் பயணித்த நபர் ஒருவர், அவரது பெட்டியில் கூட்டம் நிரம்பி வழிவதாக வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அதற்கு நேற்றைய தினம் பதிலளித்த இந்திய ரயில்வே, “இந்திய இரயில்வேயைக் கலங்கப்படுத்தும் வீடியோக்களை பதிவிட்டு, தவறாக வழிநடத்தாதீர்கள்” என அதே ரயிலின் கூட்டமில்லாத வீடியோ ஒன்றைப் பதிவிட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி X தளத்தில், மக்கள் கூட்டமாக ரயில் கழிப்பறைகளிலும் தரையிலும் அமர்ந்து பயணிக்கும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில், “நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயில் பயணம் பெரும் தண்டனையாக மாறியுள்ளது. பொது மக்களுக்கான பெட்டிகளைக் குறைத்து ‘எலைட் ரயில்களை’ மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசால், அனைத்து பயணிகளும் துன்புறுத்தப்படுகின்றனர். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுடன்கூட மக்கள் தங்கள் இருக்கைகளில் நிம்மதியாக உட்கார முடியாது.
சாமானிய மக்கள் கழிவறையிலோ அல்லது தரையிலோ அமர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மோடி அரசாங்கம் தனது கொள்கைகளால், ரயில்வே துறையைப் பலவீனப்படுத்துவதன் மூலம்… திறமையற்றது என்பதை மீண்டும், மீண்டும் நிரூபிக்க விரும்புகிறது.
அதைப் பலவீனப்படுத்திய பின்பு தனது நண்பர்களுக்கு விற்க முயற்சி செய்கிறார். சாமானியர்களின் பொதுப் போக்குவரத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் ரயில்வேயை சீரழிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.