வறுமையில் தவிக்கும் வாடகை கார் ஓட்டுநரான இளம் பெண் சுபத்ரா (ஸ்வாதி மீனாட்சி), கார்களைத் திருடி விற்கும் நண்பர்களான சிரஞ்சீவி (தேஜ் சரண்ராஜ்) மற்றும் சக்கரவர்த்தி (ரெஜின் ரோஸ்), தான் வாங்கிய பெரும் கடனை அடைக்க லஞ்சம் வாங்கும் காவல்துறை அதிகாரி நீதிமணி (ராஜேஷ் பாலசந்திரன்), தன்னிடம் வட்டிக்குக் கடன் வாங்கும் ஏழைகளிடம் அவர்களுடைய உடல் உறுப்புகளைப் பணயமாக வைக்கச் சொல்லும் பைனான்சியர் குபேரன் (விக்ரமாதித்யா), காதலிப்பதாக ஆண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இளம் பெண் அகல்யா (அனன்யா மணி) ஆகிய ஆறு பேருக்கும் ஒரே நேரத்தில் பணத் தேவை ஏற்படுகிறது. இதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் அறிமுக இயக்குநர் விநாயக் துரையின் ‘வல்லவன் வகுத்ததடா’ படத்தின் கதை.
பார்வையாளர்களிடம் வெறுப்பைச் சம்பாதிக்கும் வகையிலான காவல்துறை அதிகாரியின் கதாபாத்திரத்திற்கு ராஜேஷ் பாலசந்திரன் கச்சிதமான தேர்வு. அக்கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும், அதை ராஜேஷ் கையாண்ட விதமும் ‘தொடக்கத்தில் மட்டும்’ சுவாரஸ்யம் தருகின்றன. திருடர்களாக வரும் தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோஸ் ஆகியோர் ஓகே ரகம்.
எந்நேரமும் அழுதுகொண்டே இருக்கும் கதாபாத்திரமாக வரும் ஸ்வாதி மீனாட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வில்லன் விக்ரமாதித்யாவின் நடிப்பில் அத்தனை செயற்கைத்தனம் வெளிப்படுகிறது. சில காட்சிகளில் மட்டும் ஆறுதல் தந்து பாஸ் ஆகிறார் அனன்யா மணி. துணை நடிகர்கள் அனைவரும் ஆக்ஷன் – கட்களுக்கு இடையே வந்து போகிறார்கள்.
இரவு நேர விறுவிறுப்புக்கு கார்த்திக் நல்லமுத்தின் ஒளிப்பதிவும், ஹைப்பர் லிங்க் கதையைக் குழப்பமின்றி தொகுத்த விதத்தில் அஜய்யின் படத்தொகுப்பும் சிறிய ஆறுதலைத் தருகின்றன. ஆனால், பல இடங்களில் ஆரம்ப நிலை திரையாக்கத்தையே தாண்ட முடியாமல் தவிக்கிறது இந்தத் தொழில்நுட்பக் குழு. சகிஷ்னா சேவியரின் பின்னணி இசை சில இடங்களில் மட்டும் கைகொடுத்திருக்கிறது.
ஆறு கதாபாத்திரங்களின் வாழ்க்கையும், சமூகத்தில் பணம் செய்யும் ஆதிக்கத்தையும் ஒரே கதையில் இணைத்து, அதை அத்தியாயங்களாக பரபரவென சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் விநாயக் துரை. ஆனால், அதில் கால்வாசி கிணற்றைக் கூட தாண்ட முடியாமல் தவிக்கிறது படம். தொடர்ச்சியான கதாபாத்திர அறிமுகங்கள், அவர்களின் புதுமையில்லாத பின்கதை எனத் தொடக்கத்திலேயே கொஞ்சம் அயற்சியுடனேயே தொடங்குகிறது படம். ‘அடுத்து? அடுத்து? அடுத்து?’ என விறுவிறு என ஓடிக்கொண்டே இருக்கிற வகையிலான திரைக்கதை. ஆனால், அதற்கு ஏற்றார்போல் சுவாரஸ்யமான காட்சிகளோ, ரசிக்கும்படியான திரைக்கதை அமைப்போ இல்லை.
வழக்கமான கதாபாத்திரங்கள், அவர்களின் வழக்கமான வசனங்கள், வழக்கமான திருப்பங்கள், வழக்கமான க்ளைமாக்ஸ் என இறுதிவரை தட்டையாகவும் புதுமையே இல்லாமலும் நகர்கிறது படம். இடைவேளை ட்விஸ்ட் மட்டும் கொஞ்சம் ஆறுதல் தருகிறது. தொடக்கத்தில் சுவாரஸ்யம் தந்த ராஜேஷ் பாலசந்திரனுடைய போலீஸ் கதாபாத்திரம், இரண்டாம் பாதியில் ரிப்பீட் மோடுக்குச் சென்று அயற்சியையே தருகிறது.
பரபரப்பைக் காட்டுவதற்காக, தன் இஷ்டத்திற்கு லாஜிக்கை வளைத்து, நெளித்து ஓட்டியிருக்கிறார் திரைக்கதையாசிரியர் விநாயக் துரை. இந்த லாஜிக் ஓட்டைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு காட்சியிலும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
தன்னிடம் கடன் வாங்குபவர்களிடம், அவர்களது உடல் உறுப்பைப் பணயமாகக் கேட்டு, முத்திரைத்தாளில் கையெழுத்து வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டுகிறார் வில்லன். பால் சோறு உண்ணும் குழந்தைகள் கூட லாஜிக்கில்லாத இந்த வில்லனிஸத்தைக் கண்டு பயப்படாது பாஸ்! என்னதான், ‘அடுத்து என்ன?’ என்ற பரபரப்பை இறுக்கமாகத் திரைக்கதை பற்றிக்கொண்டு நகர்வதற்காக முயன்றாலும் அடுக்கடுக்கான லாஜிக் ஓட்டைகள் திரையிலிருந்து நம்மை விலக வைக்கின்றன.
இறுதிக்காட்சித் தொகுப்பு பரபர என நகர்ந்தாலும், “என்னென்ன சொல்றாரு பாருங்க?” எனக் கேட்க வைக்கிறது காட்சிகளின் நம்பத்தன்மை. பகவத் கீதை கதாகாலட்சேபம், கீதை வாசகங்களை வைத்து அத்தியாயத் தலைப்புகள், திரிசூல குறியீடு, இந்து மத புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட உருவகங்கள் எனச் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதாக நினைத்து, லாஜிக் ஓட்டைகளை ஆன்மிக குறியீடுகளைக் கொண்டு அடைக்க நினைத்திருக்கிறார். ஆனால், அவை அனைத்தும் மேம்போக்காக, தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆறு கதாபாத்திரங்கள், அவர்களை இணைக்கும் ஒரு பணத் தேவை, அதனால் ஏற்படும் சிக்கல்களை விவரிக்கும் அத்தியாயங்கள் என அட்டகாசமான ஒன்லைனை எடுத்துக்கொண்டு, லாஜிக்கே இல்லாத உலகம், செயற்கையான காட்சிகள், உயிர்ப்பில்லாத திரைமொழி எனப் பார்வையாளர்களை கவர மறுக்கிறது இந்த ‘வல்லவன் வகுத்ததடா’.