நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடைபெற்றது. இதனால், தமிழக அரசியல் பிரமுகர்கள் இத்தொகுதியை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இத்தொகுதியில் இருந்த விஜய தாரணி, பாஜகவில் இணைந்து, பதவியை ராஜினாமா செய்ததால், இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட், பாஜக சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி மற்றும் சுயேச்சைகள் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 2,37,741 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,55,412 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
இது 65.37 சதவீதமாகும். கடந்த 2021-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் 66.90 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதனை விட தற்போது 1.5 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியதால், வாக்குப்பதிவு யாருக்கு சாதகமாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.