புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவின்போது 66 சதவீத வாக்குகள் பதிவாகின. அதைவிட தற்போது அரை சதவீத வாக்குகள் குறைந்துள்ளன. லட்சத்தீவில் 83.88%, திரிபுராவில் 81.5%, சிக்கிமில் 80% வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிராவில் 61.2% உத்தர பிரதேசத்தில் 60.3%, ராஜஸ்தானில் 57.3%, மிசோரமில் 56.6%, பிஹாரில் 48.9% வாக்குகள் பதிவாகின. இதர மாநிலங்களில் தோராயமாக 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.