DC Vs SRH: `இதி மேட்ச் காதுரா பாலய்யா மூவி' – `கார சார' சன்ரைசர்ஸ்; `பதிலடி' டெல்லி வீழ்ந்தது எங்கே?

ஓடுகிற ட்ரெயினை ஒற்றை கையில் நிப்பாட்டும் பாலய்யா பட மோடில் இருக்கிறது சன் ரைசர்ஸ். டி20 க்குள் ஒரு ஓடிஐ க்கான ஸ்கோரை அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணி, 10 ஆண்டுகளாகத் தகர்க்கப்படாத ஆர்சிபியின் அதிகபட்ச ஸ்கோரான 263 ரன்களை இந்த சீசனில் தகர்த்திருந்தார்கள்.

அதன்பிறகும் ஓயவில்லை அவர்களின் ரெக்கார்டை அவர்களே முறியடிக்கும் வகையில் ஆர்சிபிக்கு எதிராகவே 287 ரன்களை அடித்தார்கள். இப்போது மீண்டும் ஒரு 250+ ஸ்கோரை அடித்து வென்றிருக்கிறார்கள். இந்த முறை சன்ரைசர்ஸிடம் சிக்கியிருந்தது டெல்லி.

DC Vs SRH

டெல்லி தங்களது சொந்த மைதானத்தில் நேற்றுதான் சீசனின் முதல் போட்டியை ஆடியிருந்தது. ஆனாலும் கொண்டாட்டம் குஷியெல்லாம் சன்ரைசர்ஸூக்குதான். பண்ட் தான் டாஸை வென்றார். தாராள மனதோடு சன்ரைசர்ஸூக்கு பேட்டிங் கொடுத்தார். ஆரஞ்சு ஜெர்சியில் கையில் பேட்டுடன் சன்ரைசர்ஸ் வீரர்கள் தபேலா வாசிக்கத் தயாராகினர். அவர்கள் அடித்த அடியெல்லாம் விளக்கிச் சொல்லவே முடியாது. வீடியோ கேமில்கூட இந்தளவுக்கு வேகமாகவும் விறுவிறுப்பாகவும் பவுண்டரி, சிக்சர்களை அடிக்க முடியுமா எனத் தெரியவில்லை. சன்ரைசர்ஸ் பேட்டர்கள் அந்தளவுக்கு அட்ராசிட்டி செய்திருந்தனர்.

ட்ராவிஸ் ஹெட்டும் அபிஷேக் சர்மாவும் தங்களின் சிறுவயது பேண்டஸி கிரிக்கெட் கனவுகளை மீண்டும் ஒரு முறை இந்தப் போட்டியின் மூலம் சாத்தியப்படுத்திக் கொண்டனர். ஒரே இலக்குதான் எல்லா பந்துகளையும் பவுண்டரியும் சிக்சருமாக மாற்ற வேண்டும். அதுமட்டும்தான் டார்கெட். பவர்ப்ளேயில் மட்டும் 125 ரன்களை இந்த ஓப்பனிங் கூட்டணி சேர்த்திருந்தது. ரன்ரேட் 20. ஹெட்டின் ஸ்ட்ரைக் 300 க்கு நெருக்கமாக இருந்தது. சதத்தை நெருங்கி அவுட் ஆனார். அபிஷேக் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 400 க்கு நெருக்கமாக இருந்தது. அரைசதத்தை நெருங்கி அவுட் ஆனார். அபிஷேக் அடித்திருந்த 46 ரன்களில் 44 ரன்களை பவுண்டரி சிக்சர்களில் மட்டும் அடித்திருந்தார்.

Head & Abisheik

சன்ரைசர்ஸ் பாய்ந்த வேகத்தைப் பார்த்தால் இன்றைக்கு 350 கூட சாத்தியம்தான் என தோன்றியது. ஆனால், இடையில் புகுந்து டெல்லி அணியை ஓரளவுக்கு காப்பாற்றியவர் குல்தீப் யாதவ்தான். ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, மார்க்ரம் என டாப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இந்தப் போட்டியில் க்ளாசனும் பெரிதாகச் சோபிக்கவில்லை. அதனால் மிடில் ஓவர்களில் முன்பு அவர்கள் அடித்த அடிக்கு ரன்ரேட் கொஞ்சம் குறைந்ததேபோல தெரிந்தது. ஆனால், கடைசியில் ஷபாஸ் அஹமதுவும் அப்துல் சமத்தும் அடித்து ஸ்கோரை 266 ஆக உயர்த்திவிட்டனர். இதுவே ஆச்சர்யம்தான். இதுவே இமாலய இலக்குதான். சன்ரைசர்ஸ் ஆரம்பித்த வேகத்திற்கு இந்த ஸ்கோரே கம்மியான ஸ்கோரைப் போல தெரிகிறது. எனில் அவர்களின் அதிரடி எப்படியாக இருந்திருக்கிறது என்பதை பாருங்கள்.

டெல்லிக்கு டார்கெட் 277. வேறு வழியே இல்லை. வாள் வீச வேண்டும். ஓயாமல் 20 ஓவருக்கும் வாள் வீச வேண்டும். அப்படி வீசி சாதித்தால் மட்டுமே இந்த டார்கெட்டை எட்ட முடியும். ஆனால், டெல்லியும் ஆரம்பத்தில் கொஞ்சம் மிரட்டியது. ப்ரித்திவி ஷா வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரிலேயே அவுட் ஆகியிருந்தாலும் அவுட் ஆவதற்கு முன்பு முதல் 4 பந்துகளையுமே பவுண்டரி ஆக்கியிருந்தார்.

DC Vs SRH

பவர்ப்ளே முடிகையில் டெல்லி அணியும் 88 ரன்களை சேர்த்திருந்தது. ப்ரேசர் மெக்கர்க்கும் அபிஷேக் போரெல்லும் கிடைக்கிற பந்துகளையெல்லாம் விண்ணில் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் இவர்களாலும் பெரிய இன்னிங்ஸாக அவர்களின் ஆட்டத்தை மாற்றவில்லை மயங்க் மார்க்கண்டே இவர்கள் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன்பிறகு டெல்லியால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. ரிஷப் பண்ட்டும் நிதானமான ஆட்டத்தையே ஆடியிருந்தார். தமிழக வீரரான நடராஜன் 4 ஓவர்களை வீசி 21 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

DC Vs SRH

இப்படியொரு பெரிய ஸ்கோர் ஆட்டத்தில் இது ஒரு மிரட்டலான பௌலிங். கம்மின்ஸின் கேப்டன்சியில் நடராஜன் புதிய பரிணாமங்களை எட்டி வருகிறார். சிறப்பான பந்துவீச்சால் டெல்லியை ஆல் அவுட் ஆக்கி 67 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வென்றது.

இப்படியான ஆட்டங்கள் ரசிகர்களுக்கு பார்ப்பதற்கு விருந்தாக இருக்கலாம். கொடுத்த பணத்திற்கு ஏற்ற சரியான பொழுதுபோக்காக தோன்றலாம். ஆனால், இப்படியான ஆட்டங்களால் கிரிக்கெட்டுக்கு எந்த பலனும் இல்லை என்பதே உண்மை. கிரிக்கெட்டை மேலும் வளர்க்கும் வகையில் ஆரோக்கியமான விஷயங்கள் எதுவும் இப்படியான ஆட்டங்களால் நிகழப்போவதே இல்லை. முன்பும் இப்படியான பெரிய ஸ்கோர் ஆட்டங்கள் நடந்திருக்கிறது. ஆனால், அவை எப்போதாவது நடப்பதாக இருந்தது. இப்போது அப்படியில்லை. ஒரே சீசனில் இத்தனை முறை 250+ ஸ்கோர்கள் அடிக்கப்படுவது ஒரு மோசமான விஷயம். பேட்டுக்கும் பந்துக்குமான போட்டிதான் கிரிக்கெட் ஆட்டம். ஆனால், இங்கே போட்டியில் பந்துக்கான வேலையே இல்லையே. முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு சாதகமான விதிமுறைகளும் பேட்டர்களுக்கு சாதகமான சூழல்கள் மட்டுமேதான் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. பௌலர்கள் சின்ன புள்ளியளவு கூட முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிட்ச்கள் இல்லை.

DC Vs SRH

கோலிவுட் டோலிவுட் படங்களில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் ஹீரோக்களிடம் அடிவாங்கி சுருண்டு விழும் அடியாட்களை போலத்தான் இங்கே பௌலர்கள் ட்ரீட் செய்யப்படுகிறார்கள். சிக்சர்கள்தான் முக்கியம். இதேமாதிரி 250+ஸ்கோர் ஆட்டம்தான் முக்கியமெனில் பௌலர்களுக்கு பதில் பௌலிங் மெஷின்களை பயன்படுத்திக் கொள்ளலாமே. 120 பந்துகளுக்கும் சிக்சர் பவுண்டரிகளாக அடிக்கலாம். பிசிசிஐ இந்த யோசனையை தயவுகூர்ந்து பரிசீலிக்க வேண்டும்.

இதுபோன்று 250 + ஸ்கோர் ஆட்டத்தை ஒரு கிரிகெட் ரசிகர்களாக நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.