20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது ‘கில்லி’ திரைப்படம்.
ரசிகர்கள், குடும்பங்கள் என அலைஅலையாகச் சென்று இந்த ரீ-ரிலீஸைக் கொண்டாடி வருகின்றனர். டி.வியில் திரும்பத் திரும்ப பார்த்திருந்தாலும், இன்றும் புல்லரிப்பும், காதல் நெகிழ்ச்சியும், கலகலப்பும் திரையரங்கை அதிர வைக்கின்றன. சமூக வலைதளமெங்கும் டாக் ஆஃப் தி டவுனாகியிருக்கும் ‘கில்லி’ படம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம்.
7.5 ஏக்கர் செட்
‘கில்லி’ படம் 2004ம் ஆண்டு வெளியான போதே சரவண வேலுவின் (விஜய்) அழகிய வீடும், லைட் ஹவுஸ் ஏரியாவும், மொட்ட மாடியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அந்தசமயத்தில், இதை நேரில் காண சென்னைக்குப் படையெடுத்து ஏமாந்தனர் ரசிகர்கள் பலர். விஜய்யின் வீடு, ‘கொக்கரக் கொக்கரக்கோ’ பாடலில் வரும் அழகிய மொட்டை மாடி, லைட் ஹவுஸ் எல்லாம் செட்தான். இதற்காகச் சென்னையில் 7.5 ஏக்கரில் பெரிய செட் போட்டுள்ளனர் படக்குழுவினர். அப்போது விஜய் கோலிவுட்டில் வசூல் மன்னனாக வலம் வர ஆரம்பித்த சமயம் என்பதாலும் இயக்குநர் தரணி ‘தில்’, ‘தூள்’ என வரிசையாக ஹிட் கொடுத்தச் சமயம் என்பதாலும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் நம்பிக்கையுடன் படத்திற்குச் செலவு செய்திருக்கிறார்.
இயக்குநர் பரதனின் வசனம்
இயக்குநர் தரணியின் ‘தில்’, ‘தூள்’ படங்களுக்குத் தெறியான வசனங்கள் எழுதிய பரதன்தான் ‘கில்லி’ படத்திற்கும் வசனம் எழுதினார். ‘ஆல் ஏரியாலையும் அய்யா கிங்’, ‘தனலட்சுமி என் சாமி டா’, ‘இது முத்துப் பாண்டி கோட்ட டி’ என வசனங்களால் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருந்தார். பிறகு, விஜய்யின் கவனத்தையும் ஈர்த்து அவரது அடுத்த படமான ‘மதுர’ படத்திற்கும் வசனம் எழுதி, பின்னாளில் விஜய்யை வைத்து ‘அழகியத் தமிழ் மகன்’, ‘பைரவா’ படங்களை இயக்கினார்.
வித்யாசாகரின் துணிச்சலான இசை மேஜிக்
கில்லி படத்தின் ஒரிஜினலான தெலுங்கு ‘ஒக்கடு’ படத்தில் இருந்த 6 பாடல்களும் பெரிய அளவில் ஹிட் அடித்த பாடல்களாகும். ‘கில்லி’யில் அந்த ட்யூனை அப்படியே பயன்படுத்தலாம், புதிதாக ஏதாவது போட்டு அது ஹிட்டாகவில்லை என்றால் அது படத்தின் வெற்றிக்குப் பெரும் ஆபத்தாகிவிடும் என்று வித்தியாசாகரிடம் இயக்குநர் தரணி உட்பட படக்குழுவினர் பலரும் கூறியுள்ளார். ஆனால், தெலுங்குப் பாடலின் டியூனை அப்படியே போட்டால் அது சரியாக வராது என்று ‘கில்லி’ படத்திற்கெனச் துணிச்சலாகப் புது ட்யூன் போட்டு மெகா ஹிட் கொடுத்தார் வித்யாசாகர். ‘அர்ஜுனரு வில்லு’, ‘அப்படிப் போடு’ என படத்தில் இடம் பெற்ற ஐந்து பாடல்களும் இன்று வரை கோலிவுட்டின் ஃபேவரைட் பிளே லிஸ்ட்டில் நீங்கா இடம்பிடித்துள்ளன. அதற்குக் காரணம் வித்யாசாகரின் துணிச்சலான அந்த இசை மேஜிக்தான்.
தரணியின் ‘தூள்’ படத்தில் விஜய்
மம்மூட்டியை வைத்து ‘எதிரும் புதிரும்’ என்ற படம் எடுத்த வி.சி. ரமணி, தனது அடுத்தப் படமான ‘தில்’ படம் மூலம் மெகா ஹிட் கொடுத்து கோலிட்டில் தரணியாகப் பிரபலமானார். தனது முதல் இரண்டு படங்களிலேயே கோலிவுட்டைத் திரும்பிப் பார்க்கவைத்தத் தரணிக்கு அந்த சமயத்தில் பல முன்னணி நடிகர்களிடமிருந்து வாய்ப்புகள் வந்தன. தனது அடுத்தப் படமான ‘தூள்’ கதையை விஜய்க்குச் சொல்லியிருக்கிறார். ஆனால், பல்வேறு காரணங்களால் அப்படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது. பிறகு, ‘தில்’ படத்தில் நடித்தத் தனது நெருங்கிய நண்பரான நடிகர் விக்ரமை வைத்து ‘தூள்’ படத்தை மெகா ஹிட்டாகினார். அதன்பிறகு, தரணி இயக்கத்தில் நடித்தாக வேண்டும் என்ற ஆர்வம் காட்டினார் நடிகர் விஜய். இதற்காகத் தெலுங்கில் ஹிட்டான மகேஷ் பாபுவின் ‘ஒக்கடு’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர் விஜய்யும், தரணியும். ரீ-மேக்தானே என்று ‘ஒக்கடு’ படத்தை அப்படியே எடுக்காமல் புது புது மாற்றங்கள் செய்து, பரபரப்பான திரைக்கதையுடன் சென்டிமென்ட், துடிப்பான – கலகலப்பான மதுரை வில்லன், சென்னை லோக்கல் பையனாக விஜய் எனப் படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டி படத்தை தெலுங்கில் ஹிட்டான ‘ஒக்கடு’ படத்தை தமிழில் கில்லியாக மெகா ஹிட்டாகினார்.
வில்லனாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த பிரகாஷ் ராஜ்!
பிரகாஷ் ராஜ், தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், அவரது அடையாளமாகவே மாறிப்போனது மதுரை முத்துப் பாண்டி கதாப்பாத்திரமும் ‘ஹாய் செல்லம்’ என்ற வசனமும்தான். தெலுங்கில் ‘ஒக்கடு’ படத்தில் ஒபுல் ரெட்டியாக நடித்த பிரகாஷ் ராஜ், கில்லியில் முற்றிலும் மாறுபட்ட கலகலப்பான மதுரை வில்லன் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். இதற்குப் பிறகு பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய் – பிரகாஷ் ராஜ் காம்போ இன்றும் ஹிட்டான காம்போவாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
விஜய்யின் ரசிகர்கள் பட்டாளத்தில் குவிந்த கேரள ரசிகர்கள்
‘கில்லி’ திரைப்படம் தமிழில் மெகா ஹிட்டாகி வசூல் வேட்டையாடியதுபோலவே கேரளாவிலும் வெளியாகி மெகா ஹிட்டானாது. அந்த சமத்தில் கேரளாவில் பெரிய அளவில் வசூலைக் குவித்த தமிழ்ப் படம் என்ற பெயரையும் பெற்றது. இப்படத்தின் மூலம் ஏரளாமான கேரள ரசிகர்கள் விஜய்யின் ரசிகர் பட்டாளத்தில் குவிந்தனர். அந்த அலைதான் இன்று வெள்ளமாக மாறி மலையாளத் திரையுலகில் விஜய்யின் சாம்யராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறது.
பாடலாசிரியர் கபிலன் – விஜய்யின் ஹிட் பாடல்கள்
‘ஆள்தோட்ட பூபதி’, ‘வாடியம்மா ஜக்கம்மா’ என விஜய்க்கு ஹிட்டான பாடலைக் கொடுத்தப் பாடலாசிரியர் கபிலன், ‘கில்லி’ படத்தில் ‘அர்ஜுனரு வில்லு’ பாடலைக் கொடுத்து புல்லரிக்க வைத்தார். கார் ஓட்டும்போது விஜய் இப்பாடலைத்தான் கேட்பார் என்று அந்த நேரத்தில் விஜய் பல பேட்டிகளில் சொல்லிக் கபிலனைப் பாராட்டியிருக்கிறார். இதையடுத்து ‘மச்சான் பேரு மதுர’, ‘குண்டு மாங்கா தோப்புக்குள்ள’, ‘ஆடுங்கடா என்னசுத்தி’, ‘டன்டானா டர்னா’, ‘ஹே ராமா ராமா’, ‘வாடா மாப்பிள்ளை’, ‘நான் அடிச்சா’, ‘கரிகாலன் காள’, ‘புலி உறுமுது’ என வரிசைக்கட்டி தெறி படத்தின் ‘செல்லக் குட்டி’, ‘ராங்கு’ வரை இவர்களது காம்போ தொடர்ந்து ஹிட் அடித்தது.
கில்லி படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு என்ன காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!