78 வயதான நோபல் பரிசு பெற்ற மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகி, ஊழல், கோவிட்-19 விதிமீறல் போன்ற குற்றங்களுக்காக 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
2021 ராணுவ ஆட்சிக்கு பிறகு ஆங் சான் சூகி, பெரும்பான்மையிடமிருந்து மறைக்கப்பட்டார். ஒரு ராணுவ அதிகாரி, ஊடகங்களுடன் பேசுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லாததால், தன்னுடைய பெயரை குறிப்பிட விரும்பாத நிலையில், “சூகி மற்றும் முன்னாள் ஜனாதிபதி வின் மைன்ட் ஆகியோர், உடல்நிலை மற்றும் வெப்பம் காரணமாக சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” எனக் கூறினார்.
ஜுன்டா செய்தித் தொடர்பாளர் ஜாவ் மின் துன் டாவ், “ஆங் சான் சூகி மற்றும் வின் மைன்ட் மட்டுமன்றி, சில வயது முதிர்ந்த கைதிகளுக்கும் வெப்பமான வானிலை இருப்பதால் தேவையான கவனிப்பு அளிக்கப்படுகிறது” என்று AFP-யிடம் கூறினார்.
மியான்மர் தலைநகர் நேபிடாவில் சூகி சிறை வைக்கப்பட்டிருக்கும் சிறப்பு வளாகத்தில் வெப்பநிலை புதன்கிழமை அன்று 41°C (105.8 F) ஐ எட்டும் என்றும், வரும் வாரங்களில் இன்னும் வெப்பம் அதிகமாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாட்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக 3,300 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். யாங்கூன் இன்சைன் சிறைச்சாலைக்கு வெளியே, சுமார் 200 முதல் 300 உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கைதிகள் வளாகத்திலிருந்து பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்களை வரவேற்க காத்திருந்தனர்.
சூகி, வெப்ப அலைக்கு பிறகும் எவ்வளவு காலம் வீட்டுக் காவலில் இருக்க அனுமதிக்கப்படுவார் அல்லது இந்த நடவடிக்கை அவரது தண்டனையை அதிகாரபூர்வமாக குறைத்ததா என்பது தெரியவில்லை.
விசாரணையின்போது, சூகிக்கு தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சில சமயங்களில் பல் தொற்று காரணமாக சாப்பிட முடியாமல் போவது போன்ற உடல் உபாதைகள் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சூகியின் முன்னாள் அரசு ஆலோசகரான ஆஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டர்னெல், அந்த சிறையில் குளிர்சாதன வசதி இல்லை என்றும், பருவ மழைக்காலத்தில் மழை நீர் கசிந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
1988-ல் அப்போதைய ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டங்களின்போது புகழ் பெற்ற பின்னர் சூகி, வணிக மையமான யாங்கூனில் உள்ள அவரது குடும்பத்தின் காலனித்துவ கால ஏரிக்கரை மாளிகையில் சுமார் 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்தார்.
புதன்கிழமை கைதிகள் பொது மன்னிப்பில் 13 இந்தோனேசியர்கள் மற்றும் 15 இலங்கையர்கள் நாடு திரும்புவார்கள் என்றும், கொலை, பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தவிர, மீதமுள்ள கைதிகளின் தண்டனை ஆறில் ஒரு பங்காக குறைக்கப்படும் என்றும் ஒரு அறிக்கையில் ராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.
10 ஆண்டுக்கால ஜனநாயக ஆட்சிக்குப் பிறகு 2021-ல் ராணுவ ஆட்சியைப் பிடித்த மியான்மர் ராணுவம், பெரும் பொது எதிர்ப்பை சந்தித்தது. இதைத் தொடர்ந்து 4800-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ராணுவம் கொன்று குவித்ததாகக் கூறப்படுகிறது.
சிவிலியன் ஜுண்டா எதிர்ப்புப் போராளிகள் மற்றும் நீண்டகாலமாக நிறுவப்பட்ட சிறுபான்மை இன ஆயுதக் குழுக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் வகையில், ராணுவம் தற்போது நாட்டின்மீது தனது பிடியைத் தக்கவைக்க போராடி வருகிறது.