உச்சம் தொட்டுவிட்டது வெயில். மற்ற நாள்களில் ஏசியை பயன்படுத்தாதவர்கள் கூட இப்போது ஏசியில் அதிகமாக இருப்பார்கள். கரன்ட் பில் டபுளாகி, மும்மடங்காகும். ஏசி இல்லாத வீடுகளாக இருந்தால் புதிதாக ஏசியும் வாங்குவார்கள். தொடர்ச்சியாக ஏசியை பயன்படுத்தும் இந்தக் காலத்தில், அதனை சரியாகப் பயன்படுத்துவது பற்றி அறிந்துகொள்வதும் அவசியம்.
பொதுமக்களின் நலன் கருதி சமீபத்தில் மத்திய அரசின் மின்சக்தி அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சத்தையும், அது தொடர்பான மருத்துவரின் கருத்தையும் பார்ப்போம்.
‘நமது உடலின் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். சராசரியாக நம் உடல் 23 டிகிரியிலிருந்து 39 டிகிரி வரையிலான வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டது. இதையே Human body tolerance என்று சொல்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள அறை வெப்பநிலை (Room temperature) குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்பட்சத்தில் அதற்கேற்ப நம் உடலும் தும்மல், நடுக்கம் என எதிர்வினையாற்றும்.
ஏசியை 19-20-21 என்கிற டிகிரியில் ஓட விடும்போது அறையின் வெப்பநிலை நம் உடலைவிட மிகவும் குறைவாக இருக்கும். இதனால் நம் உடல் ‘ஹைப்போதெர்மியா’ (Hypothermia) என்ற பிரச்னையைச் சந்திக்கிறது. ஹைப்போதெர்மியாவால் நம் உடலின் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். சில உறுப்புகளுக்குப் போதுமான ரத்த ஓட்டம் செல்லாமலும் தடைப்படும். இது தொடர்ச்சியாக நீடித்தால், ஆர்த்ரைட்டிஸ் போன்ற பல உடல்நலக் கோளாறுகளைச் சந்திக்க வேண்டி வரும்.
வியர்வை என்பதும் தேவைதான். உடலின் நச்சுகள் வெளியேறும் ஒரு முக்கியமான வழி. ஆகவே, குளிர்சாதன வசதியிலேயே வியர்வை இல்லாமல் இருப்பதும் சரியானதல்ல. இது தொடர்ச்சியாக நீடித்தால் சரும அலர்ஜி, அரிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு தொந்தரவுகளை வரவழைக்கும். அதேபோல் நீங்கள் குறைவான வெப்பநிலையில் ஏசியை ஓட விடும்போது, ஏசியின் கம்ப்ரெஸர் முழுமையான சக்தியுடன் தொடர்ச்சியாக ஓடும். அதிகப்படியான மின்சார நுகர்வினால் உங்களின் மின் கட்டணமும் அதிகமாகும்.
எனவே, 26 டிகிரி அல்லது அதற்கும் மேலாக ஏசியை பயன்படுத்துங்கள். 28 ப்ளஸ்ஸாக இருந்தால் இன்னும் சிறப்பு. இதனால் மின்சாரத்தேவை குறைவாகும். உங்களுடைய உடல் வெப்பநிலையும் சீராகப் பராமரிக்கப்படும். ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். மூளைக்குக் கொடுக்கப்படும் ரத்த அழுத்தம் குறையும். மொத்தத்தில் குளோபல் வார்மிங்கின் பின் விளைவுகளையும் குறைக்கும்.
ஒருவேளை 5 யூனிட் ஏசியை ஒருநாள் இரவில் நீங்கள் பயன்படுத்துவதாகக் கணக்கில் கொண்டால், 26 டிகிரி செல்சியஸில் உங்களைப் போலவே 10 லட்சம் வீடுகளில் ஏசியை பயன்படுத்தும் பட்சத்தில் ஒரு நாளில் 5 மில்லியன் யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறோம். இதையே நாடு முழுவதும் பின்பற்றினால் கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம் மிச்சப்படுத்தப்படும். ஏசியை முறையாகப் பயன்படுத்தி உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மின் பயன்பாட்டையும் குறையுங்கள். பாக்கெட்டில் இருக்கும் பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்’ என்று கூறியுள்ளது மத்திய அரசு.
இதுகுறித்து நுரையீரல் சிறப்பு மருத்துவர் திருப்பதியிடம் பேசினோம்…
‘‘முதலில் ஏர் கண்டிஷனிங் செயல்படும் முறையைத் தெரிந்துகொள்வோம். ஏர் கண்டிஷனிங் என்பது செயற்கையான காற்று அல்ல. அறைக்கு வெளியில் இருக்கும் காற்றை உள்ளிழுத்துத் தருவதும் அல்ல. அறைக்குள் இருக்கும் காற்றை குளிரூட்டித் தரும் முறைதான் ஏசி. அதனால் ஏசி பயன்படுத்துவதால் பெரிய ஆரோக்கியக் குறைபாடு எதுவும் வந்துவிடாது. அதனை முறையாகக் கையாள வேண்டும் என்பதுதான் முக்கியம்.
ஏர் கண்டிஷனிங் முறையில் அறையின் வெப்பநிலையை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இதன்மூலம் காற்றின் ஈரப்பதமும் கட்டுப்படுத்தப்படுகிறது. சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதிகளில் பூஞ்சைத்தொற்றை உருவாக்கும் தன்மை (Fungal Spores) அதிகமாக இருக்கும். ஏசியின் மூலம் ஈரப்பதத்தைக் கட்டுக்குள் வைக்கும்போது தொற்று ஏற்படுவதையும் தவிர்க்க முடியும். அதனால் ஏசியை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
ஏசியில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதுதான். ஏசியின் ஃபில்டர், மற்ற பாகங்கள் சுத்தமாக இருக்கின்றனவா என்பதைக் குறிப்பிட்ட இடைவெளியில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவற்றில் இருக்கும் தூசுகள் தேவையற்ற அலர்ஜியை உருவாக்கும் வாய்ப்பு உருவாகிவிடும். எனவே, ஆஸ்துமா நோயாளிகளும் ஏசியை தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால், மிதமான குளிர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 18, 20 என்று அதிக குளிர் இருக்கும்படி பயன்படுத்தக் கூடாது. மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி 26 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் ஏசியை பயன்படுத்துவது நல்லது. 24 டிகிரி செல்சியஸுக்கு கீழ் ஏசியை பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது. ஏசியை 20-க்குக் கீழ் வைத்துவிட்டு, சிலர் மின் விசிறியையும் அதிவேகத்தில் ஓட விடுவார்கள். ஏசி ஓடும் போது ஃபேன் பயன்படுத்த வேண்டியதில்லை. தவிர்க்க முடியாதபட்சத்தில் மிகவும் குறைவான வேகத்தில் ஃபேன் பயன்படுத்தலாம்.
ஏசியில் இருக்கிறோம் என்பதற்கு ஒரு மூடப்பட்ட அறைக்குள் நாம் இருக்கிறோம் என்பதுதான் அர்த்தம். இதுபோல் மூடப்பட்ட அறைக்குள் அதிக நேரம் செலவிடக் கூடாது. இயற்கையான காற்று கிடைக்காமல் போய்விடும். வெளியில் அதிக வெப்பமான சூழ்நிலை, அலுவலகப்பணி, தூங்கும் நேரம் என குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின்போது நம் வசதிக்காக ஏசியை பயன்படுத்தலாம். ஆனால், அப்படியே எல்லா நேரமும் இருந்துவிடக் கூடாது. அது இயற்கைக்கு மாறான விஷயம். ஏர் கண்டிஷனிங் முறையில் அறைக்குள் இருக்கும் காற்று குளிரூட்டப்பட்டு சுழற்சியாகி மீண்டும் அறைக்குள்ளேயே வருகிறது. எனவே, ஏசி காற்றை ஓரளவுதான் அனுபவிக்க வேண்டும். இயற்கையான காற்று நமக்குத் தேவை.
கார் ஏசியிலும் கவனம் செலுத்துங்கள்…
கார் ஏசியில் இரண்டு முறைகள் இருக்கும். வெளியிலிருக்கும் காற்றை உள்ளிழுக்கும் முறை ஒன்று. இரண்டாவது உள்ளிருக்கும் காற்றையே குளிரூட்டும் முறை. டிராஃபிக்கான இடங்களிலும், வாகனப்புகை, தூசு போன்றவை அதிகம் உள்ள இடங்களிலும் வெளியில் இருந்து காற்றை உள்ளிழுக்கும் பட்டனை பயன்படுத்தக் கூடாது. வாகனப்புகையின் வாசம் கூட காருக்குள் வரும்.
நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது சுத்தமான காற்று கிடைக்கும். ஓரளவு டிராஃபிக் இருக்காது. அந்தச் சூழலில் கார் போகிறது என்றால், அங்கு வெளியிலிருந்து காற்றை உள்ளிழுக்கும் முறையை உபயோகிக்கலாம். ஜன்னலைத் திறக்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. ஏனெனில், கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்து கார் என்கிற சின்னப்பெட்டியில் வெளியேற்றிக் கொண்டேயிருக்கிறோம். எனவே, வெளியில் இருக்கும் இயற்கைக் காற்றை உள்ளிழுத்துக் கொள்ளும் முறையைப் பயன்படுத்துவது அவசியம். இல்லாவிட்டால் இதனால் களைப்பு ஏற்படலாம். தலைவலி வரலாம்.