புகழ்பெற்ற இயக்குநர் `பசி’ துரை இன்று இயற்கை எய்தினார். இவர் `அவளும் பெண்தானே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர்.
முதல் படத்திலேயே வித்தியாசமான கருத்துகளால் தமிழ்த் திரை ரசிகர்களை நிமிர்ந்து பார்க்க வைத்தார். 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். சில படங்களைத் தயாரிக்கவும் செய்தார். ரஜினி, கமல், மோகன் போன்ற நடிகர்களின் படங்களை டைரக்ட் செய்ததோடு புதுமுகங்களையும் அறிமுகம் செய்து நடிக்க வைத்தார். ‘பசி’ படத்திற்காக அவருக்குத் தேசிய விருது கிடைத்தது.
மிகவும் எளியதொரு வாழ்க்கையை நகரத்தின் கடைக்கோடியில் வாழும் மக்களின் பாடுகளை மிகவும் உண்மையாகவும், நேர்த்தியாகவும் சொல்லிய வகையில் அவர் அந்தப் படத்தின் பெயராலேயே கடைசிவரை ‘பசி’ துரை என்றே அழைக்கப்பட்டார். அவர் இயக்கிய படங்களில் கண்டைப்படங்களும், இந்திப் படங்களும் அடக்கம்.
அவரது கடைசிக் காலத்தில் ரஜினியின் அறிவுறுத்தலின் படி சென்னையை அடுத்த புறநகரில் வேப்பம்பட்டு என்ற இடத்தில் ஒரு கல்யாண மண்டபத்தை நிறுவினார். அதன் மேற்பகுதியில் அவர் குடியிருந்து கொண்டு, கீழ்ப்பகுதியைக் கல்யாண காரியங்களுக்காக வாடகைக்கு விட்டுவந்தார். அவருடைய மகன்கள் யாரும் சினிமாவில் இல்லை. வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
‘பசி’ துரை முதுமையின் காரணத்தால் தனது 84வது வயதில் இறந்திருக்கிறார். அவரது ஆகச்சிறந்த படைப்புகளுக்காக அவர் எப்போதும் தமிழ் சினிமாவில் சிறப்புக்கவனம் பெறுவார். அவரது ‘பசி’ தமிழில் இதுவரை வெளியான படங்களில் தலைசிறந்த 100 படங்களில் ஒன்றாக இன்றைக்கும் மதிக்கப்படுகிறது.
அவரது இயக்கத்தில் உங்களுக்குப் பிடித்த படத்தை கமென்ட் செய்யுங்கள்.