ஒரு வருடத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டட வேலைகள், இன்று மீண்டும் தொடங்கப்பட்டன. நடிகர் சங்கக் கட்டடம் என்பது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல், புது நிர்வாகிகள், செயற்குழு எனப் பல திருப்புமுனைகளை ஏற்படுத்திய ஒன்று. நடிகர்கள் சங்கத்தின் வருவாயைப் பெருக்கவும், வளர்ச்சிக்காகவும் சொந்த கட்டடம் வேண்டும் என்பதைப் பல ஆண்டுகளாகவே சொல்லி வந்தனர்.
அதன் வரலாறு பத்து ஆண்டுகளுக்கு மேலான வரலாறாகும். கடந்த 2017ல் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்ற போது, நடிகர்கள் சங்கக் கட்டட வேலைகள் தொடங்கப்பட்டன. ரஜினிகாந்த் உட்படப் பலரும் அதன் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்திருந்தனர். அதன் பின், கட்டட வேலைகள் மளமளவென்று நடைபெற ஆரம்பித்தன. நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டி முடித்த பின்னர்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என விஷாலும் சபதம் எடுத்தது நினைவிருக்கலாம்.
விறுவிறுப்பாகத் தொடங்கிய கட்டட வேலைகள் ஐசரி கணேஷ் தொடுத்த வழக்கு, நிதிப் பற்றாக்குறை உட்பட சில பிரச்னைகள் காரணமாகப் பாதிப்படைந்தன. ஒரு கட்டத்தில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கட்டட வேலைகள் இன்று மீண்டும் தொடங்கியிருக்கின்றன. இன்று காலை நடந்த இதன் பூமி பூஜையில் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், சங்கத்தின் மக்கள் தொடர்பாளர் ஜான்சன் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் நடிகர் சங்க வளர்ச்சி நிதிக்காக கமல்ஹாசன், விஜய், கார்த்தி, உதயநிதி ஆகியோர் தலா ஒரு கோடி அளித்திருந்தனர். மேலும் பலர் நிதி உதவி அளிக்க முன் வந்திருப்பதால், கட்டட வேலைகளை இன்று ஆரம்பித்துவிட்டனர். இதுகுறித்து பூச்சி முருகனிடம் பேசினோம்…
“இப்போது வங்கிக் கடன் கிடைத்திருப்பதால், வேலைகளை மீண்டும் தொடங்கி விட்டோம். நல்ல ஆர்க்கிடெக்சர், குழு எல்லாம் நம்மிடம் இருக்கிறது. ஏற்கெனவே போட்ட பிளான்தான் என்பதால், இனி வேலைகள் மளமளவென வேகம் எடுக்கும். வங்கிக் கடனுக்கு டெபாசிட் கட்டுவதற்குப் பணம் தேவைப்பட்டது. அது இப்போது கிடைத்துவிட்டதால், கடனும் கிடைத்திருக்கிறது. இந்தாண்டுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு அது நடக்கும்” என நம்பிக்கை தெரிவிக்கிறார் பூச்சி முருகன்.
சமீபத்தில் விஷாலும் இது குறித்து மனம் திறந்திருந்தார். “கட்டட வேலைகள் விஷயத்தில் கார்த்தி முழுமையாக இறங்கி வேலை செய்து வருகிறார். அவரது மேற்பார்வையில்தான் வேலைகள் நடந்து வருகின்றன. இது ஒரு சாதாரண கட்டடமாக இருந்திருந்தால் எப்போதோ முடிந்திருக்கும். ஆனால், நடிகர் சங்கக் கட்டடம் என்பது மவுண்ட் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி போல, வள்ளுவர் கோட்டம் போல சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக இருக்குமாறு கட்டி வருகிறோம்” என்று பேசியிருக்கிறார்.