இம்பால்: மணிப்பூரில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்.22) காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் 210-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். மாநிலத்தில் அமைதி இன்னும் முழுமையாக திரும்பவில்லை.
இந்நிலையில், மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் மக்களவை தொகுதியில் முழுமையாகவும், வெளி மணிப்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 15 தொகுதிகளிலும் கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.18 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அன்றைய தினம் கிழக்கு இம்பால் மாவட்டத்திலும், விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள தமன்போக்கி பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதனால் அங்கே 11 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு இம்பால் மற்றும் கிழக்கு இம்பால் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஏப்ரல் 22-ம் தேதி (இன்று) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்களிக்க வந்த நபர் ஒருவர், “கடந்த 19 ஆம் தேதி வன்முறையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இன்று மறுவாக்குப்பதிவில் வாக்களிக்க வந்துள்ளோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது” என்றார்.
மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.