புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம்தேதி முதல்வர் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதனிடையே டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஆதிஷி நிருபர்களிடம் கூறும்போது, “கேஜ்ரிவாலின் உடல்நிலையை மோசமாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. திஹார் சிறை நிர்வாகம் அவருக்கு இன்சுலின் வழங்கவில்லை.
அவர் மாம்பழம் சாப்பிடுவதாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் கூறியது பொய். சிறையில் வைத்தே கேஜ்ரிவாலை கொலை செய்ய முயற்சி செய்யப்படுகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து திஹார் சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் காணொலி வாயிலாக கேஜ்ரிவாலுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். சுமார் 40 நிமிடங்கள் மருத்துவருடன் கேஜ்ரிவால் பேசினார்.
அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை. தற்போதைய மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ள எய்ம்ஸ் மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ‘‘நீதிமன்ற அனுமதியுடன் வீட்டு உணவு வகைகளையே கேஜ்ரிவால் சாப்பிடுகிறார். ஆம்ஆத்மி அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது’’ என்று சிறைத் துறை கூறியுள்ளது.