சென்னை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இன்று முதல் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகமாக இருக்கக் கூடும்.
அதிகபட்ச வெப்ப நிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கக் கூடும். இதர தமிழக மாவட்ட சமவெளிப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
ஏப். 26-ம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 35 சதவீதம் ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50 முதல் 85 சதவீதமாகவும் இருக்கக் கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்படம் இருக்கும்போது, ஓரிரு இடங்களில் அசகவுரியங்கள் ஏற்படலாம். வெப்ப அலையை பொறுத்தவரையில், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.