`தங்கலான்’ படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் `வீர தீர சூரன்’ பாகம் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. சமீபத்தில் வெளியான அதன் டைட்டில் டீசரில் ஆக்ஷனும் த்ரில்லரும் கலந்துகட்டி அசத்தியது. இந்நிலையில் படப்பிடிப்பு குறித்து விசாரித்தோம்.
விக்ரமின் 62வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தை ‘சித்தா’ இயக்குநர் சு.அருண்குமார் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வென்ஜரமூடு, துஷாரா விஜயன் தவிரப் புதுமுகங்கள் நிறையப் பேர் நடிக்கின்றனர். சமீபத்தில் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான இதன் டைட்டில் டீசருக்காக செங்கல்பட்டு ஏரியாவில் ஷூட்டிங் செய்தனர்.
வித்தியாசமாக இந்தப் படத்தை `பாகம் 2′ என்று சொல்வதால், இந்தப் படத்துக்குப் பிறகு `பாகம் 1′ என இதன் முன்கதை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விரைவில் படப்பிடிப்பிற்குக் கிளம்புகிறார்கள். டைட்டில் டீசரை வெளியிட்டுவிட்டு உடனடியாக ஷூட்டிங் பறக்க ரெடியானார்கள். ஆனால் தேர்தல் இருந்ததால், படப்பிடிப்பைத் தள்ளி வைத்தனர். இந்தப் படத்திற்காக மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில் லொக்கேஷன் பார்த்து வந்தார் இயக்குநர் அருண்குமார். இப்போது லொக்கேஷன்கள் தேர்வாகிவிட்டதால், இம்மாதமே படப்பிடிப்புக்குக் கிளம்புகிறார்கள்.
அநேகமாக இன்னும் சில நாள்களில் படப்பிடிப்பை மதுரையில் தொடங்கிவிடுவார்கள். தொடர்ந்து ஒரு மாதம் அங்கே படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை ஷெட்யூலை முடித்துவிட்டு, தென் மாவட்ட ஏரியாவிலேயே அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கும் கிளம்புகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் ஏற்கெனவே இரண்டு பாடல்கள் முடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். விக்ரமிற்கும், ஜி.வி.பிரகாஷுக்கும் இடையே நல்ல அலைவரிசை உள்ளது. விக்ரமின் ஆல் டைம் ஃபேவரைட் பாடல்களில் ‘தெய்வத் திருமகள்’ படத்தின் பாடல்கள் உண்டு. அதிலிருந்தே அவர் விக்ரமின் குட் புக்கில் ஜி.வி.யும் இருக்கிறார் என்பதால், சீயானுக்காக ஸ்பெஷல் கவனம் எடுத்துப் பாடல்கள் கொடுத்திருக்கிறார் ஜி.வி. ‘தங்கலான்’ படத்தின் இசையும் அவர்தான்.
இதற்கிடையே `தங்கலான்’ படத்தை ஜூன் மாதத்திற்கு கொண்டும் வரும் ஐடியாவில் இருந்தனர். ஆனால், ஜூனில் `இந்தியன் 2′ உட்பட சில படங்கள் வெளியாவதால், இதன் ரிலீஸ் ஜூலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.