Virat Kohli's No Ball Review: `ஆவேசமடைந்த கோலி!' – அது நோபாலா இல்லையா?

பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்திருந்தது.

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி போராடி 1 ரன் வித்தியாசத்தில் தோற்றிருந்தது. பெங்களூரு அணியின் முக்கிய வீரரான விராட் கோலிக்கு அவுட் வழங்கப்பட்ட விதம் சர்ச்சையானது.

Kohli

ஹர்ஷித் ராணா வீச கோலி அவுட் ஆன பந்து நோ-பால் என்பது அவரின் வாதம். கோபம். நடுவர்களிடம் ஆவேசமாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தார். ஆனால், நடுவர்களோ விதிமுறைப்படி முறையாகத்தான் முடிவு வழங்கப்பட்டது என்கின்றனர். சர்ச்சை இதுதான். உண்மை என்ன? கோலிக்கு வீசப்பட்டது நோ-பாலா இல்லையா?

மூன்றாவது ஓவரின் முதல் பந்தில்தான் இந்த சம்பவம் நடந்திருந்தது. ஹர்ஷித் ராணா ஸ்லோவாக வீசிய ஒரு ஃபுல் டாஸ் பந்தை கோலி பேட்டில் வாங்க பந்து காற்றில் எகிறியது. ஹர்ஷித் ராணாவே ஓடி வந்து பிடித்துவிட்டார். கோலி நல்ல டச்சில் இருந்தார். ஹர்ஷித் ராணா வீசிய முதல் ஓவரை நன்றாகவே எதிர்கொண்டிருந்தார். ஸ்டார்க்கின் ஓவரில் அற்புதமாக ஒரு சிக்சரை அடித்திருந்தார். மூன்றாவது ஓவரில்தான் அந்த புல் டாஸில் அவுட். நேரலையில் அந்த ஒயிடு ப்ரேமில் பார்க்கையில் பந்து விராட் கோலியின் இடுப்புக்கு மேல் செல்வதை போலவும் நோ-பாலை போலவும்தான் தோன்றியது. வர்ணனையில் இருந்தவர்களுக்கும் அப்படியே தோன்றியது.

‘ஹர்ஷித் ராணாவின் கொண்டாட்டத்தில் எந்த பிரயோஜனமும் இல்லை. விராட் கோலி ரிவியூ எடுக்கிறார். நோ-பால் என அறிவிக்கப்போகிறார்கள்.’ என்றார். முதல் பார்வையில் அனைவரின் எண்ணமும் இதுதான். கோலியும் இதே மனநிலையில்தான் இருந்தார். நான் ஸ்ட்ரைக்கர் முனையில் நின்ற டூப்ளெஸ்சிஸூமே இதே மனநிலையில்தான் இருந்தார்.

விராட் கோலியின் ரிவியூக்கு முன்பாக நடுவர்களே மூன்றாவது நடுவரின் துணையை நாடினர். மூன்றாவது நடுவர் மைக்கேல் காஃப். அவர் ஆய்வில் இறங்கினார். சில நிமிடங்களுக்கு அத்தனை பேரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். ஆய்வின் முடிவில் அவுட் என சிவப்பு நிறத்தில் எழுத்துகளை ஒளிரவிடுகிறார். கோலியின் கண்களும் ஆவேசத்தில் சிவந்தது. நடுவர்களிடம் சென்று தனது அதிருப்தியை ஆவேசமாகக் கொட்டிவிட்டு விரக்தியோடு பெவிலியனுக்கு சென்றார்.

என்னுடைய இடுப்புக்கு மேல் பந்து வந்தது கண்கூடாகத் தெரிகிறது. அப்படியிருக்கையில் எப்படி நோ – பால் கொடுக்காமல் விட்டீர்கள் என்பதுதான் கோலியின் வாதம். கோலியின் பக்கம் கோபம் மட்டுமே இருந்தது. மைக்கேல் காஃபின் பக்கம் விதிமுறை புத்தகம் இருந்தது. அதன்படி சரியாக இந்த அவுட் முடிவிற்கு அவரால் விளக்கமும் கொடுக்க முடிந்தது. பந்தின் உயரத்தின் அடிப்படையிலான நோ-பாலை வழங்குவதற்காகத் தொழில்நுட்பத்தை இன்னும் வீரியமாகப் பயன்படுத்த வேண்டும் என முடிவெடுத்திருக்கின்றனர். அதன்படி ஒவ்வொரு பேட்டரையும் அவர்கள் பேட்டிங் ஆடும் பொசிசனிலேயே நிற்க வைத்து அவர்களின் பாதத்திலிருந்து இடுப்பு வரைக்குமான உயரத்தை முன்பே அளந்து வைத்திருக்கிறார்கள்.

வீசப்படும் பந்தின் உயரம் மைதானத்திலேயே நவீன தொழில்நுட்பம் மூலம் உடனடியாக அளவிடப்படும். பந்தின் உயரம் ஏற்கனவே அளந்து வைக்கப்பட்டிருக்கும் வீரரின் இடுப்பு உயரத்தை விட அதிகமாக இருந்தால் அது நோ-பால். இடுப்பு உயரத்தை விட குறைவாக இருந்தால் அது நோ-பால் இல்லை.

கோலிக்கு அவுட் வழங்கப்பட்ட அந்த பந்தைப் பற்றி பார்க்கலாம். ஏற்கெனவே அளந்து வைக்கப்பட்டிருந்த கோலியின் இடுப்பு உயரம் 1.04 மீ. ஹர்ஷித் ராணா வீசிய அந்த பந்தின் உயரம் 0.92மீ. ஆக, இது நோ-பால் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் கோலி க்ரீஸூக்கு வெளியே தள்ளி நின்று பந்தை எதிர்கொண்டிருக்கிறார்.

வெளியே நின்று எதிர்கொள்கையில் பந்து இடுப்புக்கு மேல்தான் செல்கிறது. ஆனால், அதற்காக நோ-பால் வழங்க முடியாது. ஏனெனில், விதியின் அடிப்படையில் க்ரீஸை மையமாக வைத்துதான் இடுப்புக்கு மேல் பந்து செல்கிறதா இல்லையா என்பதை பார்ப்பார்கள். அதன்படி, கோலிக்கு வீசப்பட்ட அந்த பந்தின் போக்கையும் பாதையும் வைத்து அது க்ரீஸை எட்டுகையில் 0.92மீ உயரத்தில்தான் சென்றிருக்கிறது எனும் முடிவிற்கு நடுவர்கள் வந்தனர்.

0.92 கோலியின் இடுப்பு உயரத்தை விட குறைவு. ஆக, கோலிக்கு நோ-பால் வழங்கப்படாததில் எந்த முறைகேடும் இல்லை. அது நோ-பால் இல்லை. அவுட்தான்.

கோலியின் ஆவேசத்தைப் பற்றியும், இந்த விக்கெட் பற்றியும் உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.